நெய்வேலி மரணம்.! சிறப்பு புலனாய்வு விசாரணை தேவை.! தொல் .திருமாவளவன் ஆவேசம்.!!

By T BalamurukanFirst Published Jul 1, 2020, 11:10 PM IST
Highlights

நெய்வேலி கோர விபத்து குறித்து சிறப்புப் புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
 

நெய்வேலி கோர விபத்து குறித்து சிறப்புப் புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

"கடலூர் மாவட்டம், நெய்வேலி 2-வது அனல்மின் நிலையம், அலகு 5 இல் இன்று கொதிகலன் வெடித்ததில் இதுவரை 6 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் உயிரிழக்கும் நிலையுள்ளதாகத் தெரிய வருகிறது. இந்தக் கோர விபத்து மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.அதே அனல்மின் நிலையத்தில் கடந்த மே 7 ஆம் நாள் இதே போன்றதொரு விபத்து நடைபெற்றது. அப்போது 5 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்து சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்துள்ளனர்.

அடுத்தடுத்து ஒரே இடத்தில் ஒரே மாத இடைவெளியில் இரண்டு கோர விபத்துகள். ஒரு விபத்துக்குப் பின்னரும் இன்னொரு விபத்து எனில், இத்தகைய மோசமான கவனக்குறைவுக்கு யார் பொறுப்பு? இவற்றின் முழுமையான பின்னணியைக் கண்டறிய சிறப்புப் புலனாய்வு விசாரணைக்கு ஆணையிட வேண்டும். தொடர் விபத்துக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி இத்தகைய விபத்துகள் நிகழாமல் இருக்க கூடுதலான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்விபத்தில் உயிரிழந்தோர், காயமுற்றோர் யாவரும் ஏழை-எளிய கும்பங்களைச் சார்ந்த கடைநிலைத் தொழிலாளர்கள். எனவே, உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி ரூபாயும் காயமுற்றோர் குடும்பத்தினருக்கு பாதிப்புகளுக்கேற்ப தலா ரூ.25 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை இழப்பீடும் வழங்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.


 

click me!