மதுரை தலித் அங்கன்வாடி பெண் ஊழியர்கள் இடமாற்றம் ரத்து !! மனித உரிமை ஆணையம் அதிரடி !!

By Selvanayagam PFirst Published Jun 14, 2019, 9:53 AM IST
Highlights

மதுரை மாவட்டத்திலுள்ள எஸ்.வலையபட்டி கிராம அங்கன்வாடியில்  தலித் பெண்கள் உணவு வழங்கக் கூடாது என்று சிலர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதையடுத்து அந்த இடமாற்ற உத்தரவை ரத்து  செய்த மாநில மனித உரிமை ஆணையம் இது குறித்து உரிய விளக்கம் அளிக்குமாறு மாவ்ட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூன் 3ஆம் தேதியன்று மதுரை மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியிடங்களை நிரப்ப உத்தரவு பிறப்பித்தது மாவட்ட நிர்வாகம். இதன்படி, மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள எஸ்.வலையபட்டியில் அதே ஊரைச் சேர்ந்த 2 தலித் பெண்கள் அங்கன்வாடி சமையலராகவும் உதவியாளராகவும் பணியில் அமர்த்தப்பட்டனர். இதற்கு அடுத்தநாள், இருவரும் பணியில் சேர்ந்தனர்.

ஆனால், வலையபட்டியைச் சேர்ந்த ஊர் மக்களில் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருவரையும் இடமாற்றம் செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர். இவர்களை மாற்றும்வரை அங்கன்வாடிக்குக் குழந்தைகளை அனுப்பமாட்டோம் என்று தெரிவித்தனர். 

அதேபோல, ஒரு குழந்தை கூட அங்கன்வாடிக்கு வரவில்லை. இதனால், கடந்த ஒரு வார காலமாக அப்பெண்கள் சமைத்த உணவு வீணாகிப் போனது. இது பற்றி தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இணை இயக்குநர் மலர்விழி விசாரணை மேற்கொண்டார்.

இதையடுத்து, தலித்  பெண்கள் இருவரும் கிழவனேரி என்ற ஊருக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இது பற்றிய செய்திகள் வெளியானதையடுத்து, இந்த விவகாரத்தைத் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது மாநில மனித உரிமைகள் ஆணையம். மேலும் அந்த இருவரது இடமாற்ற உத்தரவை ரத்து செய்தது.

கிராம மக்களில் சிலரது நெருக்கடிக்குப் பயந்து அங்கன்வாடி பணியாளர்களை இடமாற்றம் செய்தது ஏன் என்று மதுரை மாவட்ட நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது மாநில மனித உரிமை ஆணையம். இது பற்றி ஜூலை 17ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டுமென்று மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயசந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

click me!