சாதி வன்கொடுமை கேஸ்ல உள்ள போடுங்க... தலித் எம்.எல்.ஏ.,க்கள்லாம் என்ன செய்றீங்க..? கொதிக்கும் பா.ரஞ்சித்..!

By Thiraviaraj RMFirst Published Dec 4, 2019, 3:24 PM IST
Highlights

கோவையில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த கட்டடத்தின் சுவர் உரிமையாளரை ஏன் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக் கூடாது? என இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார். 

தீண்டாமை சுவரினால் 17பேர் பலியான இடத்தில் மக்களை சந்தித்து இன்று ஆறுதல் கூறினார் இயக்குனர் பா.ரஞ்சித்.  முன்னதாக ட்விட்டரில் இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த அவர், ’’தமிழகத்தின் தனித் தொகுதி எம்.எல்.ஏ.க்கள் 17 தலித்துகளின் இறப்பிற்கேனும் நீதி கேட்டு ஒன்றிணைவீர்களா? எத்தனையோ முறை இந்த சுவரை அகற்ற சொல்லி முறையிட்டும், அதை தட்டி கழித்து அரசும் சாதியாளர்களும் நிகழ்த்திருக்கும் கொடூரச் செயல்.

அதிக மழையைக் கண்டு அச்சம் அடைந்த மக்கள், மூன்று நாட்களுக்கு முன்புகூட சுவர் பாதிப்பு ஏற்படுத்தும் என மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு இருக்கிறார்கள். சுவர் கொண்ட வீட்டு உரிமையாளரிடம் முறையிட்டு இருக்கிறார்கள். அவர்களின் அலட்சயத்தின் விலை 17 உயிர்கள். போராட்டம் செய்த தமிழ்ப்புலிகள் தலைவர் நாகை திருவள்ளுவன் உள்ளிட்ட தோழர்களை காவல்துறையினர் அடித்து இழுத்துச் சென்று விட்டார்கள். சுவர் கொன்ற 17 உடல்களை புதைத்தும் விட்டார்கள். இனி நிவாரணம் கேட்டு போராட வேண்டும். அவ்வளவு தான். அடுத்த இறப்பு வரும் வரை காத்திருப்போம்.

தனித் தொகுதியில் நின்று அரசியல் அதிகாரத்தை அடைந்தவர்கள் தற்போது இறந்து போன 17 தலித்துகளின் இறப்பிற்கேனும் நீதி கேட்டு ஒன்றிணைவீர்களா என மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நீதி என்பது நிவாரணம் அல்ல. சாதிப்பிரிவினையின் சான்றாக 17 பேரைக் கொன்ற சுவர் போல இனி எங்கும் சுவர்கள் இருக்கக்கூடாது என்கிற உத்திரவாதம் தேவை.

ஒடுக்கப்பட்ட மக்களின் விரல் மையினால் ஆட்சியில் அமர்ந்து கொண்டிருப்பவர்களே.. உங்களின் கள்ள மௌனம் அவர்களை இன்னொரு முறை கொன்று கொண்டிருக்கிறது’’என அவர் தெரிவித்துள்ளார்.

click me!