அப்பா அப்படி... நான் இப்படி... மனம் திறந்த உதயநிதி ஸ்டாலின்..!

By Thiraviaraj RMFirst Published Mar 21, 2021, 3:22 PM IST
Highlights

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வீடுவீடாக சென்று, முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஓட்டுவேட்டையாடி வருகிறார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். 
 

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வீடுவீடாக சென்று, முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஓட்டுவேட்டையாடி வருகிறார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். 

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட போது மூத்த மருத்துவர் வேல்முருகனையும், அவரது குடும்பத்தாரையும் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவரை அன்போடு வரவேற்று வாழ்த்திய மருத்துவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நன்றி தெரிவித்தார்.பின்னர் பேசிய அவர், எனது வெற்றி வாய்ப்பு சிறப்பாக இருக்கிறது. மக்களிடம் எழுச்சி இருக்கிறது. மாற்றத்திற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. திமுக வெல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

நான் எளிமையாக பேசுவதாக கூறுகிறார்கள். எனக்கு என்ன வருகிறதோ அதைத்தானே பேச முடியும். எனக்கு எதுகை மோனையாகப் பேச வராது. சென்ற மக்களவைத் தேர்தல், அதற்கு முன்னர் கிராமசபைக் கூட்டத்தின்போதும் இதுபோன்றுதான் பேசினேன். மக்களும் அதைத்தான் விரும்புகிறார்கள். அது ஒரு கலந்துரையாடல் போலத்தான். மக்களே சில விஷயங்களைப் பேசும்போது எடுத்துக் கொடுக்கிறார்கள். அதையும் இணைத்துப் பேசுகிறேன். சேப்பாக்கம் தொகுதியிலும் அதேபோல்தான் மக்களிடம் பேசுகிறேன்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போது 30 நாள் இடைவெளி இருந்தது. அதன் பின்னர் பல இடங்களில் பேச முடிந்தது. இந்த முறை முதன்முதலில் நான்தான் நவம்பரில் பிரச்சாரத்தை ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் முதல் 10 நாட்கள் தொடர்ந்து கைது செய்தார்கள். பேச விடவில்லை. ஏப்ரல் இறுதியில் தேர்தல் இருக்கும் என சாதாரணமாக இருந்தேன். ஏப்ரல் 6-ம் தேதியே தேர்தல் என்பதால், இப்போது கூடுதலாக ஒரு நாளைக்கு 2,3 தொகுதிகள் பேசுகிறேன். சேப்பாக்கத்திலும் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

சேப்பாக்கத்தில் சாக்கடை, குடிநீர் பிரச்சினை, பட்டா பிரச்சினை உள்ளது. கண்டிப்பாகத் தேர்வு செய்யப்பட்டால் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவேன். முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன். நான் இப்போதும் திரைத்துறையில்தான் இருக்கிறேன். ரிட்டையர் ஆகிவிட்டு அரசியலுக்கு வரவில்லை. இப்பவும் 3, 4 படங்கள் கைவசம் உள்ளன. அதை தேர்தல் முடிந்த உடன் முடிக்க வேண்டும். கண்டிப்பாக சட்டப்பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டால் கூடுதல் கவனம் என்னைத் தேர்வு செய்த மக்களுக்காகச் செய்வேன். சினிமா என் தொழில். அரசியல் எனக்குப் பிடித்தது.

நான் சின்ன வயதிலிருந்தே ஆயிரம் விளக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்துள்ளேன். ஆயிரம் விளக்கில் நான் போகாத வீடே கிடையாது. அப்போதெல்லாம் இதுபோன்று செல்போன், ஊடகங்கள் போன்ற வசதிகள் கிடையாது. அதனால் பெரிதாக வரவில்லை. நான் அப்போதிருந்தே பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். சினிமாவுக்குப் போன பிறகு சில இடங்களில் பொதுவெளியில் சுதந்திரமாகப் போக முடியாது, அவ்வளவுதான். மற்றபடி நான் சுதந்திரம் போனதாக, விட்டுக்கொடுத்து வாழ்வதாக எல்லாம் நினைக்கவில்லை. நான் மனதுக்குப் பிடித்ததைச் செய்கிறேன். மனப்பூர்வமாகச் செயல்படுகிறேன்.

அப்பா ஸ்டாலினிடம் சில விஷயங்களை தைரியமாகப் பேசிவிடுவேன். தலைவர் ஸ்டாலினிடம் அப்படி எல்லாம் பேசிவிட முடியாது. பார்த்துத்தான் பேச வேண்டும். அந்தக் கண்டிப்பு எப்போதும், யாராக இருந்தாலும் அவரிடம் இருக்கும். தலைவர் ஸ்டாலின் நிரம்பக் கண்டிப்பானவர்’’என அவர் தெரிவித்தார்.

click me!