
சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக பொது செயலாளர் சசிகலா, பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை சென்னை சிறைக்கு மாற்றுவதற்காக தினமும் வழக்கறிஞர்கள் சந்தித்து வருகின்றனர். இதற்காக சட்ட நிபுணர்களுடன், அதிமுக நிர்வாகிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
ஆனால், சசிகலாவை வேறு சிறைக்கு மாற்றுவதற்கு குறைந்தபட்சம் 6 மாதம் ஆகும் என கர்நாடக அரசு வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
இதையொட்டி சசிகலாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, ஏற்கனவே அவர் சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு ரத்த கொதிப்பு, நீரிழிவு நோய் ஆகியவை உள்ளது. மேலும், கடந்த சில நாட்களுக்கு முன், கூவத்தூர் தனியார் விடுதியில் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டனர்.
அப்போது, அங்கிருந்து வெளியேறிய எம்எல்ஏ சரவணன், தன்னை கடத்தி சென்று அடைத்து வைத்ததாக போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் சசிகலா உள்ளிட்டவர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
எனவே உடல் நலக்குறைவு மற்றும் மேற்கண்ட வழக்கின் விசாரணைக்காக அடிக்கடி சென்னை சென்று வர முடியாது என கூறி, சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றம் செய்ய முடிவு செய்தனர். ஆனால், அதிலும் பல சட்ட சிக்கல் ஏற்பட்டு, அவரை மாற்றம் செய்ய முடியாத நிலை உள்ளதாக தெரிகிறது.
குறிப்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள் சசிகலா தங்கியுள்ள அறையின், பக்கத்து அறையில் தங்கி இருந்தவர் சைனைடு மல்லிகா. இவர் மீது 18 கொலை வழக்குகள் உள்ளன. மேலும் அவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சினிமா துறையில் இருந்த காலத்தில் இருந்து தீவிர ரசிகை.
ஏற்கனவே தமிழகத்தில் ஜெயலலிதா மறைவில் மர்மம் இருப்பதாக கூறி வருகின்றனர். இதனால், சைனைடு மல்லிகாவால், சசிகலாவுக்கு ஆபத்து ஏற்படும். எனவே அவரை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், அந்த கோரிக்கையும் நீர்ப்பூத்துவிட்டது. சைனைடு மல்லிகாவால் தான் பிரச்சனை ஏற்படும் என கூறுவதால், உடனடியாக எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் சைனைடு மல்லிகாவை பெல்காம் மத்திய சிறைக்கு மாற்றிவிட்டனர்.