மறு உத்தரவு வரும்வரை இந்த 11 செயல்பாடுகளுக்கு மட்டும் தடை நீடிக்கும்.. தமிழக அரசு அதிரடி

By karthikeyan VFirst Published May 2, 2020, 7:58 PM IST
Highlights

ஊரடங்கு தளர்வு குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்ட தமிழக அரசு, மறு உத்தரவு வரும் வரை செயல்படக்கூடாத 11 செயல்பாடுகளையும் தெரிவித்தது. 
 

கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில், மே 3ம் தேதிக்கு பிறகு மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், ஊரடங்கு தளர்வு குறித்து விவாதிக்க இன்று முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடியது. 

அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்தவிதமான தளர்வுமின்றி முழு ஊரடங்கு தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகள்(நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் அல்லாத) மற்றும் மற்ற மாவட்டங்களிலும் நோய் கட்டுப்பாட்டு பகுதியை தவிர மற்ற பகுதிகளில் சில தளர்வுகள் செய்யப்பட்டு அந்த பட்டியல் வெளியிடப்பட்டன. 

அத்துடன் சேர்த்து, மறு உத்தரவு வரும் வரை செயல்படக்கூடாத 11 செயல்பாடுகளையும் வெளியிட்டுள்ளது தமிழக அரசு. அவற்றை பார்ப்போம்.

1. பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள்.

2. வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.

3. திரையரங்குகள், கேளிக்கைக்கூடங்கள், மதுக்கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற இடங்கள்.

4. அனைத்து வகையான சமய, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள், விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.

5. பொது மக்களுக்கான விமான, இரயில், பொது பேருந்து போக்குவரத்து. 

6. டாக்ஸி, ஆட்டோ, சைக்கிள் ரிக்சா.

7. மெட்ரோ இரயில், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து.

8. மாநிலங்களுக்கு இடையேயான பொது மக்கள் போக்குவரத்து.

9. தங்கும் விடுதிகள் (பணியாளர் விடுதிகள் தவிர), தங்கும் ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள்.

10. இறுதி ஊர்வலங்களில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.

11. திருமண நிகழ்ச்சிகளுக்கு, தற்போது உள்ள நடைமுறைகள் தொடரும்.

இந்த 11 செயல்பாடுகளும் அரசின் மறு உத்தரவு வரும்வரை செயல்படக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
 

click me!