
தமிழகத்தில் ஜூன் 21ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பில்;- கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக, இந்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு சில தளர்வுகளுடன் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு 30-6-2021 வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு, அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில், கொரோனா பெருந்தொற்று நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த, முழு ஊரடங்கு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஊரடங்கு வரும் 14-6-2021 அன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில், நோய்த் தொற்றின் தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும், நோய்த் தொற்று பரவாமல் தடுத்து, மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்திலும், இந்த முழு ஊரடங்கு 14-6-2021 முதல் 21-6-2021 காலை 6-00 மணி வரை, மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.