
இந்தியாவில் வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதையடுத்து நாளை அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. குறிப்பாக இந்தியாவிலும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடியது. இதையடுத்து, கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு தற்போது மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வந்ததையடுத்து, ஊரடங்குகள் தளர்த்தப்பட்டது. இதனால் மக்கள் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவதை மறந்து வழக்கம்போல் இருந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஒருமாதமாக இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, பஞ்சாப், கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது. மேலும் இந்தியாவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு 33% அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
இதனிடையே கொரோனா அதிகரிப்பு காரணமாக மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று முதல் 21ம் தேதி வரை, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்கும்படி மக்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது.
இந்நிலையில், மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு தொடர்பாக, மார்ச் 17-ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். தடுப்பூசி செயல்முறையை எவ்வாறு விரைவுபடுத்துவது என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த முறை கொரோனா வைரஸ் பரவியபோது திடீரென ஊரடங்குகளை அறிவித்தது. தற்போது மீண்டும் கொரோனா பரவி வருவதாக மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.