ராஜேந்திர பாலாஜியை பதவியை விட்டு தூக்குங்க... திண்டுக்கல் சீனிவாசன் மீது நடவடிக்கை எடுங்க ... எடப்பாடிக்கு சிபிஎம் கடிதம்!

By Asianet TamilFirst Published Feb 7, 2020, 7:24 AM IST
Highlights

திருச்சியில் நடந்த ஒரு படுகொலையை இது மதரீதியான வன்மத்துடன் நடத்தப்பட்ட கொலை எனக் கூறியதும் முற்றிலும் ஆதாரமற்றவை. மதவிரோதத்தை உருவாக்குவதாகும். இன்னொரு பேட்டியில் இந்து அமைப்புகள் இதுவரை யாருக்கும் தீங்கு இழைக்கவில்லை எனக் கூறியுள்ளார். ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் தமிழ்நாட்டில் இந்து பயங்கரவாதம் உருவாவதை தடுக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.
 

மதவெறிக்குத் தூபமிடும் கருத்துகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்; ஆணவத்துடன் பழங்குடியின சிறுவனை அழைத்து செருப்பைக் கழற்ற சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது நடவடிக்கை தேவை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக கே.பாலகிருஷ்ணன் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடர்ந்து வரம்புமீறி, சமூகப் பதற்றத்தை உருவாக்கும் வகையிலும், மதவெறியைத் தூண்டும் வகையிலும் பேசி வருவது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குள் மதவெறி அமைப்பினைச் சார்ந்த குண்டர்கள் புகுந்து பேராசிரியர் மற்றும் மாணவ - மாணவியர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாடு முழுவதும் இத்தாக்குதலைக் கண்டித்து குரலெழுப்பி வரும் நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இந்த கிரிமினல் தாக்குதலை ‘தேசபக்த செயல்’ எனக் கூறியுள்ளார். மதவெறி, சமூக விரோத சக்திகளின் குற்றங்களை ஒரு அமைச்சரே தேசபக்த செயல் எனக் கூறுவது மிகுந்த கண்டனத்திற்குரியதாகும்.


ஒரு சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையொட்டி பேட்டியளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளிமாநிலங்களிலிருந்து வந்துள்ள இஸ்லாமியர்கள் மட்டுமே இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றனர் எனக் கூறியதும், திருச்சியில் நடந்த ஒரு படுகொலையை இது மதரீதியான வன்மத்துடன் நடத்தப்பட்ட கொலை எனக் கூறியதும் முற்றிலும் ஆதாரமற்றவை. மதவிரோதத்தை உருவாக்குவதாகும். இன்னொரு பேட்டியில் இந்து அமைப்புகள் இதுவரை யாருக்கும் தீங்கு இழைக்கவில்லை எனக் கூறியுள்ளார். ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் தமிழ்நாட்டில் இந்து பயங்கரவாதம் உருவாவதை தடுக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இத்தகைய மதவெறி கருத்துகள் அதிமுகவின் கருத்துகள் அல்ல எனவும், அவையனைத்தும் அவரது சொந்தக் கருத்து எனவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியில் தெரிவித்துள்ளார். சொந்தக் கருத்தாக இருப்பினும் அமைச்சர்கள் சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கும் வகையில் பேசுவதும், அரசியல் சாசனத்தின் மீது உறுதிமொழியேற்று பதவி வகிப்பவர்கள் மதவெறியையும், சட்டவிரோதச் செயல்களையும் தூண்டும் வகையில் பேசுவதும் அரசியல் சாசனத்திற்கு விரோதமானதாகும். எனவே, சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தி, சட்டம் - ஒழுங்கைச் சீர்குலைக்கும் வகையில், மதவெறிக்குத் தூபமிடுகிற கருத்துகளைத் தொடர்ந்து தெரிவித்து வரும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.


தமிழக அரசின் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் நீலகிரி மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறுவனை அழைத்து தனது செருப்பைக் கழற்றும்படி கூறியுள்ளார். அச்சிறுவனும் அவரது காலில் உள்ள செருப்பைக் கழற்றியுள்ளான். இது சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளது. இச்செயல் சந்தேகத்திற்கு இடமின்றி அமைச்சரின் ஆணவப் போக்கிற்கு எடுத்துக்காட்டு. மேலும் பழங்குடி மக்களை இழிவுபடுத்தும் செயல். எனவே, இது குறித்து உரிய சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்''. எனக் கடிதத்தில் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

click me!