தமிழக அரசின் முடிவிற்கு எதிராக சிபிஎம்..! முதலமைச்சருக்கு அவரச கடிதம் எழுதிய பாலகிருஷ்ணன்

Published : May 30, 2022, 07:33 AM IST
தமிழக அரசின் முடிவிற்கு எதிராக சிபிஎம்..! முதலமைச்சருக்கு அவரச கடிதம் எழுதிய பாலகிருஷ்ணன்

சுருக்கம்

சொத்துவரி உயர்வில் மக்களின் கோரிக்கைகளை கவனத்தில் கொள்ள வேண்டுமெனவும். ஆண்டுக்கு 6 சதவிகிதம் சொத்து வரி உயர்வு என்பதை கைவிட வேண்டுமெனவும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், தமிழக முதலமைச்சர்  மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

சொத்து வரி உயர்வால் மக்கள் பாதிப்பு

தமிழகத்தில்  ஆண்டுக்கு 6 சதவிகிதம் சொத்து வரி உயர்வால் 10 ஆண்டுகளில் 100% சொத்து வரி உயர்வு ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாகவும், இதன் காரணமாக சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அனைவரும் மிகப்பெரும் வரிச்சுமைக்கு ஆளாக்கப்படுவார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழக அரசு சமீபத்தில் அறிவித்துள்ள சொத்துவரி உயர்வு என்பது, சாதாரண ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களை மிகவும் கடுமையாக பாதிக்கக் கூடியதாகும். அதாவது, சொத்துவரி உயர்வு என்பது 600 சதுர அடிக்கு குறைவான பரப்புள்ள கட்டிடங்களுக்கு 25 சதவிகிதமும், 601-1200 சதுர அடி வரை பரப்புள்ள கட்டிடங்களுக்கு 50 சதவிகிதமும், 1201-1800 சதுர அடி பரப்புள்ள கட்டிடங்களுக்கு 75 சதவிகிதமும், 1800 சதுர அடி பரப்புக்கு மேல் உள்ள கட்டிடங்களுக்கு 100 சதவிகிதமும் வரி வசூல் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு அறிவிப்புக்கு கண்டனம்

   ஏற்கனவே, கொரோனா பெருந்தொற்றாலும், அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்தும் மீண்டு வரமுடியாமல் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தவித்துக் கொண்டுள்ளனர். மேலும், ஒன்றிய அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றின் விலையை உயர்த்திக் கொண்டு வருவதாலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது தவிர இந்த குறுகிய காலத்தில் பலர் வேலையின்றியும், ஏற்கனவே பெற்றுவந்த வருமானத்தைவிட குறைவாகவும் பெற்று வாழ்க்கை நடத்த முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசின் சொத்து வரி உயர்வு என்பது அவர்களை கடுமையாக பாதிக்கும். உள்ளாட்சி அமைப்புகளில், ஒன்றிய அரசு திட்டங்களின் கீழ் உதவிகள் பெற வேண்டுமெனில் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்த வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவிட்டது வன்மையான கண்டனத்திற்குரியது. ஒன்றிய அரசின் உத்தரவு அடிப்படையில்தான் இந்த உயர்வு என்று அறிவிக்கப்பட்டாலும் கூட,  இந்த சொத்து வரி உயர்வு என்பது ஏழை, எளிய, நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும்.

10 ஆண்டுகளில் 100% வரி
  
தமிழக அரசின் ஆணையின்படி சொத்துவரி செலுத்துவோரின் கருத்துக்கள் கேட்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளிலும் சொத்து வரி செலுத்துவோர் வரி உயர்வுக்கு தங்களது ஆட்சேபணைகளை தெரிவித்துள்ளார்கள். ஆனால், சம்பந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இந்த ஆட்சேபணைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், மீண்டும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதின் அடிப்படையில் புதிய சொத்து வரி தீர்மானிக்கப்பட்டுள்ளது. மக்களின் கோரிக்கைகளை சிறிதும் கவனத்தில் கொள்ளாமல் மீண்டும் அதே வரியை தீர்மானித்திருப்பது மக்களின் உணர்வுகளை அரசு செவிசாய்க்கவில்லை என்ற நிலையை உருவாக்கி விடும் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.  மேற்கண்ட வரி உயர்வு மட்டுமின்றி, ஒவ்வொரு ஆண்டும் 6 சதமான சொத்து வரி உயர்த்தப்பட வேண்டுமெனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை செயல்படுத்தினால் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் 6 சதமான வரி உயர்வு ஏற்பட்டு 10 ஆண்டுகளில் நூறு சதவிகித சொத்து வரி உயர்வு ஏற்படும்.  இதன் காரணமாக சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அனைவரும் மிகப்பெரும் வரிச்சுமைக்கு ஆளாக்கப்பட வேண்டிய நிலைமை உருவாகும். எனவே, ஒவ்வொரு ஆண்டும் 6 சதமான வரி உயர்வு என்பதை முழுமையாக கைவிட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் வற்புறுத்திக் கேட்டுக் கொள்வதாக அந்த கடிதத்தில் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்
100 பேர் கூட இல்லாத டாக்டர் ராமதாஸ் டெல்லி போராட்டம்..! ஒங்கும் அன்புமணி கை