குழப்பத்துல இருக்காதீங்க... தெளிவா முடிவெடுங்க... கொரோனா விவகாரத்தில் அரசுக்கு முத்தரசனின் அதிரடி யோசனைகள்!

By Asianet TamilFirst Published Apr 9, 2020, 8:49 PM IST
Highlights

கடந்த இரு வாரங்களாக நீடிக்கும் ஊரடங்கும், கொரானா நோய் தொற்று பரவும் அபாயமும், அன்றாட வாழ்க்கைத் தேவைக்கான போராட்டமும் நடந்து வரும் நிலையில் பீதியும், பதற்றமுமான நிலை தொடர்கிறது. இந்த நிலையில், ஒத்தி வைக்கப்பட்டுள்ள 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது அவசியம் தானா? இதனை ரத்து செய்ய செய்வது மாணவர்கள் மத்தியில் அடுத்த நிலைக்கு செல்லும் தைரியத்தை தரும் என்பதால் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.” என முத்தரசன் தெரிவித்துள்ளார். 

தமிழக அரசு ஒரு தெளிவான நிலை எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரானா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் முடக்கப்பட்டு இரு வாரங்கள் முடிந்துவிட்டன. ஆனாலும் நோய் தொற்று பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், நடைமுறையில் இருந்து வரும் நாடு தழுவிய ஊரடங்கு நடவடிக்கை ஏப்ரல் 14ம் தேதியுடன் முடிவுக்கு வருமா?அல்லது மேலும் நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக மாநில முதல்வர்கள் தெரிவித்த கருத்துகள் மூலம், நாடு முடக்கம் செய்யப்பட்ட நிலை மேலும் நீடிக்கும் என்ற கருத்து வலுப்பெறுகிறது.
ஆனால், மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் நாடு முழுவதும் தொடரும் ஊரடங்கு தொடர்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்கிறார். தமிழக முதல்வர் குறிப்பிட்ட 14 பிரிவுகளில் தொழில்கள் இயங்கலாம் என்று உத்தரவிட்டார். பின்னர் அதனை உடனடியாக ரத்து செய்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. அரசு ஒரு தெளிவான நிலை எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருப்பதை இது காட்டுகிறது. கொரானா வைரஸ் நோய்த் தொற்று பரவி வருவதைக் கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் ஒரு திட்டவட்டமான முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும். கொரானா வைரஸ் நோய் தொற்று பரவி வருவதால் பொது சுகாதார அவசர நிலை நெருக்கடி ஏற்பட்டதை உணர்ந்த மத்திய அரசு இயற்கைப் பேரிடராக அறிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் கொரானா வைரஸ் நோய்த் தொற்றுக்கு 738 பேர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 8 பேர் மரணமடைந்து விட்டனர். லட்சக்கணக்கில் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குற்றவியல் சட்டப் பிரிவு 144-ன்படி தடையுத்தரவு நடைமுறையில் உள்ளது. தொற்று நோய்கள் சட்டம் 1897, பிரிவு 2ன் படி மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இந்தத் தீவிரமான நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் தமிழ்நாடு அரசுக்கு, கொரானா நோய்த் தொற்று தடுப்பு கருவிகள் வாங்கவும், நோய் பரிசோதனை ஏற்பாடுகளை விரிவுபடுத்தவும், தனிமைப்படுத்தி உள்ளவர்களுக்கு மருத்துவ உதவி செய்யவும் மத்திய அரசு ரூபாய் 12 ஆயிரத்து 200 கோடி, இயற்கை பேரிடர் கால நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் வெறும் ரூபாய் 510 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்து மத்திய அரசு தமிழக மக்களை வழக்கம் போல் வஞ்சித்து வருகிறது.
ஆட்கொல்லி நோய்த் தொற்று தடுப்புக்கால நிவாரணமாக சில உதவித் திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவித்து, அவைகளைச் செயல்படுத்தி வருகிறது. இந்த நிவாரண உதவிகள் பெரும்பான்மை மக்களுக்குக் கிடைக்கவில்லை என்பதை மாநில அரசு உணர வேண்டும். குறிப்பாக நல வாரியங்களில் பதிவு செய்யப்பட்ட அனைவருக்கும் நிவாரண உதவி வழங்கினாலும், வாரியங்களில் பதிவு செய்யாத பல்லாயிரம் குடும்பங்கள் நிலை குறித்து தமிழ்நாடு அரசு மனிதாபிமானத்துடன் பரிசீலிக்க வேண்டும். வாரியங்களில் பதிவு செய்யாத அமைப்புசாரத் தொழிலாளர்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.


கடந்த இரு வாரங்களாக நீடிக்கும் ஊரடங்கும், கொரானா நோய் தொற்று பரவும் அபாயமும், அன்றாட வாழ்க்கைத் தேவைக்கான போராட்டமும் நடந்து வரும் நிலையில் பீதியும், பதற்றமுமான நிலை தொடர்கிறது. இந்த நிலையில், ஒத்தி வைக்கப்பட்டுள்ள 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது அவசியம் தானா? இதனை ரத்து செய்ய செய்வது மாணவர்கள் மத்தியில் அடுத்த நிலைக்கு செல்லும் தைரியத்தை தரும் என்பதால் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.” என முத்தரசன் தெரிவித்துள்ளார். 
 

click me!