ஹெச்.ராஜாவிடம் இருந்த கடைசி பதவியும் பறிப்பு... தமிழக பாஜகவுக்கு பொறுப்பாளர் சி.டி.ரவி அதிரடி..!

By vinoth kumarFirst Published Nov 15, 2020, 12:43 PM IST
Highlights

கேரள மாநிலப் பொறுப்பாளராக தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான கோவை சி.பி. ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்படுவதாக பாஜக தலைமை அறிவித்துள்ளது.

கேரள மாநிலப் பொறுப்பாளராக தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான கோவை சி.பி. ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவும் தேர்தலை முன்னிட்டு வேல் யாத்திரை நடத்த முயன்று வருகிறது. யாத்திரைக்குப் பிறகு அரசியல் மாற்றம் வரும் எனவும், பாஜக கைகாட்டுபவர்கள்தான் ஆட்சியமைக்க முடியும் எனவும் பாஜகவினர் பேசி வருகிறார்கள். இந்நிலையில், பல்வேறு மாநிலங்களுக்கான பொறுப்பாளர்களை பாஜக அறிவித்தது. அதன்படி, தமிழக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராக கர்நாடகாவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.டி.ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடக சுற்றுலா வளர்ச்சி மற்றும் கன்னட வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த சி.டி.ரவி. அவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, பாஜக தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதால் தனது பதவியை ராஜினாமா செய்தார். வரும் சட்டமன்றத் தேர்தல் மூலம் தமிழகத்தில் பாஜக வலுவாக காலூன்ற வேண்டும் என கடும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், சி.டி.ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுபோலவே பாஜகவின் கேரளா மாநில பொறுப்பாளராக, தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். பாஜக தேசியச் செயலாளர் பதவியிலிருந்து ஹெச்.ராஜா நீக்கப்பட்ட நிலையில், தமிழகத்திலிருந்து யாருமே தேசிய முக்கியம் வாய்ந்த பதவிகளில் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து, தேசிய மகளிரணித் தலைவராக வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டார். தற்போது, ஹெச்.ராஜா வகித்து வந்த கேரள பொறுப்பாளர் பதவி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று உ.பி., தேர்தல் பொறுப்பாளராக ராதா மோகன்சிங், மேற்குவங்க மாநில பொறுப்பாளராக கைலாஷ் விஜய்வர்கியா, மற்றும் குஜராத், மணிப்பூர் , உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

click me!