ஆனால் கடந்த சில நாட்களாகவே எச்.வசந்தகுமாரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து வந்தது.
தமிழகத்தில் கொரோனாவை எதிர்த்து போராடும் முன் களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசார், தூய்மை பணியாளர்கள் ஆகியோர் தொற்றால் பாதிக்கப்படுவதும், அடுத்தடுத்து உயிரிழப்பதும் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. அதேபோல் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வரும் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கொரோனா தொற்று விட்டுவைக்கவில்லை.
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் கடந்த 10ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருடைய மனைவிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து கடந்த சில நாட்களாக தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சூழலில் எச்.வசந்தகுமார் உடல்நிலை குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி கூறுகையில், வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். உடல்நிலை சீராக உள்ளது. அவர் விரைவில் குணமடைவார் என நம்பிக்கை தெரிவித்தார்.
ஆனால் கடந்த சில நாட்களாகவே எச்.வசந்தகுமாரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து வந்தது. இந்நிலையில் இன்று மாலை 6.56 மணி அளவில் எச்.வசந்தகுமார் (70) உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. கொரோனா காலத்திலும் தனது தொகுதி மக்களுக்கு தொடர் நலத்திட்ட பணிகளை செய்து வந்த எச்.வசந்தகுமாரின் மரணம் காங்கிரஸ் கட்சி தலைவர்கள், தொண்டர்களை மட்டுமின்றி கன்னியாகுமரி தொகுதி மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எச். வசந்தகுமார் ”வசந்த அண்ட் கோ” என்ற பெயரில் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்கும் கடை நடத்தி வருகிறார். இதற்கு தமிழகம் முழுவதும் ஏராளமான கிளைகள் இருக்கின்றன. இவர் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், மூத்த அரசியல் தலைவருமான குமரி அனந்தனின் தம்பி ஆவார். மேலும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் சித்தப்பா என்பது குறிப்பிடத்தக்கது.