
திமுக தலைவர் கருணாநிதி, கனிமொழி எம்.பி குறித்த அவதூறு கருத்து தெரிவித்த புகாரில் முகாந்திர இருந்தால் பாஜக தேசிய செயலாள எச்.ராஜா மீது வழக்கு பதியலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் எழும்பூர் காவல் நிலைய ஆய்வாளருக்கு உத்தரவிட்டுள்ளது.
"தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே." என கருணாநிதி குறித்தும் அவரது மகள் கனிமொழி குறித்தும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மிகவும் கீழ்த்தரமாக பதிவிட்டிருந்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுகவினர் தமிழகம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டனர். சென்னையில் குப்பைத் தொட்டிகளில் எச்.ராஜாவின் போஸ்டர்களை ஒட்டினர்.
எச்.ராஜாவின் டுவிட்டருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், ஒரு பெண்ணை நாகரிகமாக கூட பேச தெரியாதவரா எச்.ராஜா என்றும் கேள்வி எழுப்பி இருந்தனர்.
எச்.ராஜாவின் டுவிட் பதிவு குறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழ்நாடு இசை வேளாளர் நலச்சங்க தலைவர் குகேஷ் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நொளம்பூர் காவல் நிலையத்தில் எச்.ராஜா மீது அளித்த புகாரை விசாரிக்கவில்லை குகேஷ் குறிப்பிட்டிருந்தார்.
அந்த மனு மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மனுவை நீதிபதி சதீஷ்குமார் விசாரித்தார். அப்போது, எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். கனிமொழி எம்.பி குறித்த அவதூறு கருத்து தெரிவித்த புகாரில் முகாந்திரம் இருந்தால், எச்.ராஜா மீது வழக்கு பதியலாம் என்றும் நீதிபதி கூறினார்.