
போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த விவகாரத்தில் தமிழக மக்களே கதிகலங்கி போய் நிற்கும் நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைவிட நீதிமன்றம் அதிகப்படியான அக்கறை செலுத்துகிறது.
போக்குவரத்து ஊழியர்களுக்கு 2.57 மடங்கு ஊதிய உயர்வு, பிடித்தம் செய்த நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் தொடர்ச்சியாக 8வது நாளாக இன்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
8 நாட்களாக போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொங்கல் பண்டிகை நெருங்கிவருவதால், சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமலும், பொங்கல் பண்டிகையை கொண்டாட தேவையான பொருட்களை வாங்க செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர்.
இதைவிட பொதுமக்களை ஒரு அரசால் கொடுமைப்படுத்த முடியாது என்ற அளவில், தமிழக மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். பொதுமக்களின் கஷ்டத்தை உணர்ந்துள்ளதாக காட்டுவதற்காக, தற்காலிக ஊழியர்களை நியமித்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்குப் பதிலாக பேருந்துகள் இயக்கப்படாமலேயே இருக்கலாம் எனும் அளவிற்கு விபத்துகள் நடந்தேறுகின்றன.
தற்காலிக ஓட்டுநர்களுக்கு பேருந்துகளை சரியாக இயக்கத் தெரியவில்லை. விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளன. அரசு பேருந்தை கண்டாலே மக்கள், தலை தெறித்து ஓடுகின்றனர். சாலையில் செல்லும் மற்ற வாகனங்களும் அரசு பேருந்தை கண்டு தெறிக்கின்றன. அந்த அளவுக்கு தற்காலிக ஓட்டுநர்கள் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளனர்.
ஓட்டுநர்கள் இப்படியென்றால்.. நடத்துநர்கள் வேற லெவல்.. லுங்கி அணிந்துகொண்டு மஞ்சள் பையில் டிக்கெட் கட்டணத்தை வசூலித்தனர் நடத்துநர்கள். தற்காலிக நடத்துநர் என்ற நடைமுறை, அதிகாரப்பூர்வமான அங்கீகரிக்கப்பட்ட வெளிப்படையான திருட்டுக்கு வழிவகுத்துள்ளது. நடத்துநர் என்ற போர்வையில், பயணிகளிடம் பலர் கட்டணத்தை வசூலித்து விட்டு ஓடிவிடுகின்றனர்.
நாகை-திருவாரூர் அரசு பேருந்தில் பயணிகளிடம் கட்டணம் வசூலித்த போலி நடத்துநர், ஆண்டிப்பாளையம் பகுதியில் டிக்கெட் பரிசோதகரை கண்டவுடன் தெறித்து ஓடிவிட்டார். அதன் பின்னர் தான், அவர் போலி நடத்துநர் என்ற விஷயம் பேருந்தில் இருந்த பயணிகளுக்கு தெரியவந்துள்ளது.
இப்படி தமிழகம் முழுவதும் பல்வேறு அவலங்கள் அரங்கேறிவரும் நிலையில், தமிழக அரசு இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவதில் அக்கறை காட்டுவதாக தெரியவில்லை. தமிழகம் முழுவதும் விபத்துகள், கட்டண கொள்ளைகள், போலி நடத்துநர்களின் திருட்டு வேலைகள் என தமிழகமே மிரண்டு நிற்கிறது. ஆனால், இதை பற்றியெல்லாம் அரசு கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.
மக்கள் படும் இன்னல்களை அரசு கண்டுகொள்ளவே இல்லை. போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் இனிமேல் பேச்சுவார்த்தை எல்லாம் நடத்த முடியாது என துறையின் அமைச்சர் தெரிவிக்கிறார். இதனால் பாதிப்படைவது யார் என்பதை அறிந்துதான் அவர் அப்படியெல்லாம் பேசுகிறாரா? அல்லது பிரச்னையின் தீவிரத்தை உணராமல் பேசுகிறாரா? என்ற கேள்விகள் எழுகின்றன. இரண்டில் எதுவாக இருந்தாலும், பாதிக்கப்படுவது தங்களுக்கு வாக்களித்த மக்கள் என்பதை உணர்ந்தல்லவா அமைச்சர் செயல்பட வேண்டும்.
மக்கள் சந்திக்கும் இன்னல்களை கண்டு நீதிமன்றமே வருத்தப்படும் நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், ஆட்சியாளர்களும் அலட்சியம் காட்டுவது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர நீதிமன்றம் முடிந்தவரை போராடுகிறது. எனக்கும் உங்களுக்கும் பிரச்னை இல்லை. பாதிக்கப்படுவது மக்கள் தான். போக்குவரத்துத்துறை நஷ்டத்தில் இயங்கினால் தனியார் மயமாக்கி விட வேண்டியதுதானே. மக்களை ஏன் கஷ்டப்படுத்துகிறீர்கள்? மருத்துவமனைக்கு கூட செல்ல முடியாமல் ஏழை நடுத்தர வர்க்க மக்கள் தவித்து வருகின்றனர் என நீதிபதி வேதனையையும் கோபத்தையும் பதிவு செய்தார். ஆனால் இதில் துளியளவும் கூட ஆட்சியாளர்களிடத்தில் இல்லை.
இதுதொடர்பான வழக்கை இன்றும் உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. பொதுமக்களின் இன்னல்களை முடிவுக்கு கொண்டுவர தீவிர முயற்சியை நீதிமன்றம் மேற்கொண்டு வருகிறது. சட்டத்தையும் நீதிமன்றத்தின் அதிகாரத்தையும் பயன்படுத்தி வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர என்ன செய்யமுடியுமோ அதை சிறப்பாக செய்துவருகிறது நீதிமன்றம். ஆனால் அரசோ, நீதிமன்றம் விசாரிக்கிறது என காரணம்காட்டி அலட்சியமாக இருக்கிறது. வேலைநிறுத்தம் தொடர்பாக நீதிமன்றத்தின் கேள்விக்கு பதிலளித்து விட்டால், தன்னளவிலான கடமை முடிந்துவிட்டதாக கருதும் அரசு, இருந்தால் என்ன? இல்லையென்றால் என்ன? என்ற கேள்வி மக்களிடத்தில் எழுந்துள்ளது.