ஜெயலலிதா ஆட்சியில் ஊழல் நடந்தது...! அம்மாவை அசிங்கப்படுத்திய அமைச்சர்! அடுக்குமா சாமீ?

By Vishnu PriyaFirst Published Dec 31, 2018, 12:35 PM IST
Highlights

அம்மா ஆட்சியில் போக்குவரத்து துறையில் ஊழல் நடந்ததுங்கிற தொனியில் இருக்குது விஜயபாஸ்கரின் பேச்சு. இதுக்கு இவரு பேசாமலேயே இருந்திருக்கலாம்.” என்கின்றனர். தன் கட்சிக்காரர்கள் தன்னை வெச்சு செய்வதை அறிந்து, கடும் கடுப்புக்குள்ளாகி இருக்கிறார் வி.பா!

காலம் ஒரு மிகப்பெரிய மந்திரவாதி! அவன் நரியை பரியாக்குவான், பரியை நரியாக்குவான்!..என்பார்கள். அது தமிழக அரசியலுக்கு எந்தளவுக்கு ஒத்துப் போகிறதென்று பாருங்கள். அம்மா ஆட்சியில் தேனாறும் பாலாறும் தழும்பத்தழும்ப ஓடுது! என்று புகழக்கூட அம்மாவிடம் பர்மிஷன் வாங்கிவிட்டு வாய் திறப்பார்கள் அ.தி.மு.க. அமைச்சர்கள். ஆனால், இன்று அதே கட்சியின் அமைச்சர் தங்கள் கட்சியின் ஆட்சியில் ஊழல் நடந்ததாக கிட்டத்தட்ட ஒப்புக்கொண்டு வாயாடியுள்ளார். 

யார் அந்த அமைச்சர்? என்ன விவகாரம்?... கரூர் தொகுதி எம்.எல்.ஏ.வான விஜயபாஸ்கர் போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கிறார். இவருக்கும், செந்தில்பாலாஜிக்கும் மிக கடுமையான அரசியல் மோதல் நிகழ்ந்து வந்த நிலையில் பாலாஜி, தி.மு.க.வுக்கு தாவினார். சமீபத்தில் தன் தலைமையில் பாலாஜி நடத்திய பிரம்மாண்ட விழாவுக்காக கரூர் வந்த ஸ்டாலின், அமைச்சர் விஜயபாஸ்கரை ஊழல் புகாரில் போட்டுத் தாளித்தார்.

  

இந்நிலையில் இதற்கு பதில் தருகிறேன் என்று விஜயபாஸ்கர் வாய் திறந்து சொல்லியிருக்கும் விஷயங்கள் அவரது கட்சியினரையே தலையில் அடிக்க வைத்துள்ளன. அதாவது...”செந்தில்பாலாஜி அமைச்சராக இருந்தபோது முப்பத்து எட்டாயிரம் தற்காலிகப் பணியாளர்களை நியமித்து, போக்குவரத்துக் கழகத்துக்கு நெருக்கடியான இழப்பை ஏற்படுத்தினார். ‘ஜி.பி.எஸ். மெஷின் வாங்கியதில் ஊழல் செய்தவர் செந்தில்பாலாஜி.’ என்று ஸ்டாலினே சட்டமன்றத்தில் செந்தில்பாலாஜி மீது புகார்  தெரிவித்தார். 

அந்த நபரை இப்போது கட்சியில் சேர்த்துக் கொண்டு ஊழல் பற்றி ஸ்டாலின் பேசுகிறார்.” என்று விளாசியிருந்தார். இந்த பதிலைக் கண்டுதான் தி.மு.க.வினர் சிரிக்கின்றனர், அ.தி.மு.க.வினர் அழாத குறையாக நோகின்றனர். காரணம்? பதில் சொல்லும் அ.தி.மு.க. சீனியர்கள் “ஸ்டாலினையும், செந்தில்பாலாஜியையும் தாக்குகிறேன் பேர்வழின்னு அமைச்சர் எங்க கட்சியையும், அம்மாவின் ஆட்சியையும்தான் கேவலப்படுத்தியிருக்கார்.

 

செந்தில்பாலாஜி அமைச்சரா இருந்தது அம்மா முதல்வராக இருந்தப்பதான். அந்த சமயத்துல முப்பத்து எட்டாயிரம் பேரை தன் இஷ்டத்துக்கு நியமித்து அரசுக்கு நெருக்கடியை உருவாக்கினார்!ன்னு இவர் சொல்லிருப்பதால், ‘அப்போ இதையெல்லாம் கவனிக்க வேண்டிய ஜெயலலிதா என்ன பண்ணிட்டிருந்தார்? அவர் கையில அதிகாரம் இருந்தது இல்லையா?’ன்ன் கேட்கிறாங்க இப்போ.

அதேமாதிரி ’ஜி.பி.எஸ். ஊழல்’பற்றி இவர் பேசியிருக்கிறது மூலம் அன்னைக்கு ஸ்டாலின் சொன்ன ஊழல் புகாரை இப்போ இவரு ஒத்துக்கிட்ட மாதிரியில்ல இருக்குது. இதெல்லாம் அடுக்குமா சாமீ!? ஆக, அம்மா ஆட்சியில் போக்குவரத்து துறையில் ஊழல் நடந்ததுங்கிற தொனியில் இருக்குது விஜயபாஸ்கரின் பேச்சு. இதுக்கு இவரு பேசாமலேயே இருந்திருக்கலாம்.” என்கின்றனர். தன் கட்சிக்காரர்கள் தன்னை வெச்சு செய்வதை அறிந்து, கடும் கடுப்புக்குள்ளாகி இருக்கிறார் வி.பா!

click me!