
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்
தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் 1,058 காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த செப்டம்பர் மாதம் எழுத்துத்தேர்வு நடத்தியது. தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் மாதம் 7-ந்தேதி வெளியிடப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 1,058 விரிவுரையாளர்களை தேர்வு செய்வதற்காக கடந்த செப்டம்பர் மாதம் 16-ந்தேதி நுழைவு தேர்வு நடந்தது. தமிழ்நாடு முழுவதும் 1 லட்சத்து 33 ஆயிரம் பேர் அந்த நுழைவு தேர்வை எழுதினார்கள்.
அந்த தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 7-ந்தேதி வெளியானது. இதைத் தொடர்ந்து தேர்வானவர்கள் சான்றிதழ் பரிசீலனைக்கு வருமாறு அழைக்கப்பட்டனர். சுமார் 2 ஆயிரம் பேரின் சான்றிதழ்கள் பரிசீலனை செய்யப்பட்டன.
அப்போது 220-க்கும் மேற்பட்டவர்களின் சான்றிதழ்களில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. தேர்வானவர்களின் மதிப்பெண் சான்றிதழில் முறைகேடுகள் இருப்பதாக அறிந்தனர். இதையடுத்து இது தொடர்பாக அதிகாரிகள் முழுமையான விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.
அந்த விசாரணையின் போது நுழைவு தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் திட்டமிட்டு திருத்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அதாவது மதிப்பெண் சான்றிதழ்கள் ஸ்கேன் செய்யப்பட்டபோது திருத்தப்பட்டு இருப்பது தெரிந்தது.
200 மதிப்பெண்களுக்கு 50 மதிப்பெண் எடுத்தவர்கள் 150 மதிப்பெண்கள் எடுத்தது போல திருத்தங்கள் நடந்து இருப்பது உறுதியானது. இதற்காக ஒவ்வொருவரிடம் இருந்தும் தலா ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் பெற்று இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இந்த சான்றிதழ் மாதிரி சோதனை அடிப்படையில்தான் நடத்தப்பட்டது. அந்த சோதனையிலேயே மதிப்பெண் சான்றிதழ்களில் தில்லுமுல்லு நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இதுவரை நடந்துள்ள ஆய்வில் இந்த முறைகேடு ரூ.50 கோடி வரை சம்பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து விசாரிக்கும்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு, கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டு உள்ளார். அதன் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் 100 க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கையை தொடங்கி உள்ளனர். விடைத்தாள் திருத்தம் செய்தவர்கள், குறுக்குவழியில் வேலையில் சேர முயன்றவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது.