யார் யாருக்கு எவ்வளவு சொத்து..! வேட்டையை துவங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை..! கலக்கத்தில் முன்னாள் அமைச்சர்கள்.!

By Selva KathirFirst Published Jun 5, 2021, 12:23 PM IST
Highlights

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதல் வேலையாக லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக கந்தசாமி நியமிக்கப்பட்டார். இவர் சிபிஐயில் பணியாற்றியவர். குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவை கைது செய்தவர். அந்த அளவிற்கு ஹை புரபைல் அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு திமுக கொண்டு வந்ததே முன்னாள் அமைச்சர்களை குறி வைக்கத்தான் என்கிறார்கள்.

முன்னாள் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு சொத்து சேர்த்துள்ளனர்என்கிற விவரத்தை லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வு செய்ய ஆரம்பித்துள்ளதாக வெளியான தகவல் அதிமுகவினரை கலங்க வைத்துள்ளது.

கடந்த 2011 முதல் 2021 வரை அதிமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி, எஸ்பி.வேலுமணி, தங்கமணி, கே.சி.வீரமணி, விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், ஜெயக்குமார் என பலர் நீண்ட காலம் அமைச்சர்களாக இருந்துள்ளனர். அதிலும் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், காமராஜ், எஸ்பி வேலுமணி போன்றோர்  மீது அதிமுக ஆட்சியில் இருந்த போதே ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. மேலும் அமைச்சர்கள் சொத்துகளை வாங்கி குவித்துள்ளதாக அப்போதே செய்திகள் வெளியாகின. தேர்தல் சமயத்தில் திமுக கொடுத்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு ஊழல் செய்த அமைச்சர்களை சிறைக்கு அனுப்புவோம் என்பது தான்.

அதே போல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதல் வேலையாக லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக கந்தசாமி நியமிக்கப்பட்டார். இவர் சிபிஐயில் பணியாற்றியவர். குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவை கைது செய்தவர். அந்த அளவிற்கு ஹை புரபைல் அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு திமுக கொண்டு வந்ததே முன்னாள் அமைச்சர்களை குறி வைக்கத்தான் என்கிறார்கள். இதனிடையே கடந்த அதிமுக ஆட்சியில் விடுக்கப்பட்டு பெண்டிங்கில் இருந்த டெண்டர்கள் அனைத்துமே கேன்சல் செய்யப்பட்டுள்ளன. அத்தோடு கடந்த அதிமுக ஆடசியை ஒப்பிடும் போது தற்போது தமிழக அரசுக்கு இழப்பீடு இல்லாத வகையில் டெண்டர்கள் விடப்பட்டு வருகின்றன.

இதற்கு காரணம் லஞ்ச ஒழிப்புத்துறை கொடுத்த சில இன்புட்டுகள் தான் என்கிறார்கள். இதற்கிடையே கடந்த அதிமுக ஆட்சியில் மிகவும் செல்வாக்கோடு இருந்த அமைச்சர்களின் சொத்து விவரங்களை லஞ்ச ஒழிப்புத்துறை ரகசியமாக ஆராய்ந்து வருவதாக சொல்கிறாக்ள். முதற்கட்டமாக அமைச்சர்களின் பினாமிகள் யார் யார் என்று கண்டறியும் பணி நடைபெற்று வருவதாக சொல்கிறார்கள். குறிப்பாக முன்னாள் அமைச்சர்களின் டிரைவர்கள், உதவியாளர்கள், நெருங்கிய உறவினர்கள் மட்டும் அல்லாமல் தூரத்து உறவினர்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிக்க ஆரம்பித்துள்ளதாக கூறுகிறார்கள்.

மேலும் கடந்த பத்து ஆண்டுகளில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் வாங்கிய சொத்துகள் உள்ளிட்ட விவரங்களை சேகரிக்க மாவட்டத்திற்கு ஒரு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு அவர்கள் உள்ளூர் போலீசாரோடு இணைந்து முக்கிய விவரங்களை சேகரிப்பதாக சொல்கிறார்கள். இந்த வேலையை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் கந்தசாமி நேரடியாக மேற்பார்வையிடுவதாகவும் கூறுகிறார்கள். அதிலும் குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் என கடந்த ஆட்சியில் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தவர்களை லஞ்ச ஒழிப்புத்துறை குறி வைத்து காய் நகர்த்துவதாக கூறுகிறார்கள்.

click me!