சசிகலா அம்மையார் கட்சியில் இல்லை.. அதே கெத்து... எடப்பாடியார் துணிச்சலின் பின்னணி..!

By Selva KathirFirst Published Jun 5, 2021, 12:06 PM IST
Highlights

தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மறுபடியும் அதிமுகவை கைப்பற்ற சசிகலா காய் நகர்த்தி வருகிறார். ஆனால் தேர்தலுக்கு பிறகு முதலமைச்சர் பதவி, ஆட்சி, அதிகாரத்தை இழந்த எடப்பாடியார் சசிகலா விவகாரத்தில் எச்சரிக்கையுடன் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

முதலமைச்சராக இருந்த போது சசிகலாவைஅதிமுகவில் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி  கூறியது ஒரு பெரிய விஷம் இல்லை. ஆனால் தற்போது ஆட்சி அதிகாரத்தில் இல்லாத போதும் சசிகலாவிற்கு எதிரான எடப்பாடியாரின் நடவடிக்கைகள் அரசியல் நோக்கர்களால் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியதாகியுள்ளது.

தமிழக அரசியலில் சசிகலாவின் ஆதரவாளராக இருந்து மிக உச்சநிலைக்கு சென்றவர்களில் மிக முக்கியமானவர் எடப்பாடி பழனிசாமி. கடந்த 2011ம் ஆண்டு முதன் முதலாக எடப்பாடி பழனிசாமி அமைச்சராக பதவி ஏற்றார். அப்போது முதல் சசிகலாவிற்கு மிகவும் நெருக்கமானவராக எடப்பாடி பழனிசாமி திகழ்ந்தார். மிகவும் விசுவாசம் காட்டியதால் முக்கிய இலாக்காக்கள் எடப்பாடி பழனிசாமியை தேடி வந்தது. நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை என்கிற பசையுள்ள இலாக்காக்களுடன் கட்சியிலும் தலைமை நிலையச் செயலாளர் என்கிற அளவிற்கு எடப்பாடி பழனிசாமி உயர்ந்தார்.

இதனிடையே ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலா சிறை செல்ல நேர்ந்தது. அப்போது சசிகலாவால் முதலமைச்சராக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் சசிகலா சிறை சென்ற சில நாட்களிலேயே மத்திய அரசு மூலம் அதிமுக நெருக்கடிக்கு ஆளானது. கட்சியை காப்பாற்ற சசிகலாவுடனான தொடர்பை துண்டித்த எடப்பாடியார், ஓபிஎஸ்சுடன் இணைந்து அதிமுகவை மீட்டு எடுத்தார். அதன் பிறகு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவின் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்தார். தேர்தலில் அதிமுக படுதோல்வியை தழுவும் என்று பலரும் கணித்த நிலையில் கொங்கு மண்டலத்தில் கணிசமான தொகுதிகளை வென்று கட்சியின்மானத்தை காப்பாற்றியதில் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் பங்கு உண்டு.

தேர்தலுக்கு முன்னரே சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்திருந்த போதும் கூட அவருக்கும் அதிமுகவிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று டெல்லியில் வைத்து பேட்டி அளித்தார் எடப்பாடியார். சசிகலாவிற்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியவர்களை தயவு தாட்சன்யம் பார்க்காமல் கட்சியில் இருந்தும் அவர் வெளியேற்றினார். இந்த நிலையில் சசிகலா அரசியல் களத்தில் இருந்து ஒதுங்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மறுபடியும் அதிமுகவை கைப்பற்ற சசிகலா காய் நகர்த்தி வருகிறார். ஆனால் தேர்தலுக்கு பிறகு முதலமைச்சர் பதவி, ஆட்சி, அதிகாரத்தை இழந்த எடப்பாடியார் சசிகலா விவகாரத்தில் எச்சரிக்கையுடன் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சசிகலா அம்மையார் அதிமுகவிலேயே இல்லை என்று அவர் திட்டவட்டமாக கூறியிருப்பது எடப்பாடியாரின் கெத்தை காட்டுகிறது. அரசியலில் தன்னை ஆளாக்கியவராக இருந்தாலும் கூட கட்சி தற்போது தன் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்பதை உணர்த்த சசிகலாவிற்கு எதிரான தனது நிலைப்பாட்டை ஆணித்தனமாக எடப்பாடி பழனிசாமி உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன் சசிகலாவை மறுபடியும் அதிமுகவில் சேர்க்க தினகரன் மேற்கொண்டு வரும் முயற்சிக்கும் எடப்பாடி பழனிசாமி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சசிகலாவிற்கு எதிரான தனது நடவடிக்கைகளில் தேர்தலுக்கு முன், பின் என எந்த மாற்றமும் இல்லை என்பதை எடப்பாடி பழனிசாமி உறுதிப்படுத்தியுள்ளார். எனவே அடுத்து சசிகலா என்ன செய்யப்போகிறார்? என்பது தான் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

click me!