கர்நாடகத்தை கதி கலங்க வைக்கும் கொரோனா.. மாநில மக்களை எச்சரிக்கும் முதல்வர் எடியூரப்பா..

By Ezhilarasan BabuFirst Published Mar 29, 2021, 5:36 PM IST
Highlights

கர்நாடகத்தில் புதிதாக 3 ஆயிரத்து 82 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறிப்பட்டுள்ளது. பெங்களூரில் மட்டும்  புதிதாக 2000 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் கொரோனா எண்ணிக்கை வேகமாக  அதிகரித்து வருவதால், அது மிகுந்த கவலை அளிக்கிறது எனவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தங்கள் மாநிலம் தள்ளப்பட்டுள்ளதாகவும் அம்மாநில சுகாதாரம் மற்றும் மருத்துவ கல்வி அமைச்சர் டாக்டர் கே.சுதாகர் கூறியுள்ளார். நாளொன்றுக்கு சராசரியாக 300 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் மார்ச் மாத இறுதியில் அதன் எண்ணிக்கை 3 ஆயிரமாக அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். 

கர்நாடகத்தில் புதிதாக 3 ஆயிரத்து 82 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறிப்பட்டுள்ளது. பெங்களூரில் மட்டும்  புதிதாக 2000 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகள்  காரணமாக கடந்த சில மாதங்களாக படிப்படியாக குறைந்து வைரஸ் தொற்று கட்டுக்குள் இருந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. இதனால் நாட்டின்  முக்கிய பெருநகரங்களான டெல்லி, கல்கத்தா, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் வைரஸ் தொற்றின் தாக்கம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 66 ஆயிரத்து 328 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3 ஆயிரத்து 72 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 லட்சத்து 87 ஆயிரத்து 12 ஆக அதிகரித்துள்ளது. மேலும்  வைரஸ் தொற்றுக்கு 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அம்மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 12,504 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து வைரஸ் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அது கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று கர்நாடக சுகாதாரம் மற்றும் மருத்துவ கல்வி அமைச்சர் டாக்டர் கே.சுதாகர் கூறியுள்ளார். கர்நாடகாவில் ஞாயிற்றுக்கிழமை 2000க்கும் மேற்பட்ட புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஜெயநகர் பொது மருத்துவமனையில் கோவிட் நோயாளிகளுக்கு 50 சதவீத ஆக்சிஜன் நிறைந்த படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் கொரோனா கர்நாடக மாநிலத்தில் தீவிரமடைந்துள்ளதே அதற்கு காரணம். மார்ச் மாத தொடக்கத்தில் ஒப்பிடும்போது அம்மாநிலத்தில் கொரோனா தொற்று 10 மடங்கு அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மார்ச் 1 முதல் 3 வரை  நாள் ஒன்றுக்கு 300 பேர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது படிப்படியாக உயர்ந்து மாத  இறுதியில் அதன் எண்ணிக்கை 3 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இது தங்களுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது என்றும், தாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் சுதாகர் கூறியுள்ளார். 

பெங்களூருவில் முழு ஊரடங்கு அல்லது இரவு  நேர ஊரடங்குக்கு இது இட்டுச் செல்லுமா என்ற கேள்வி பலர் மனதிலும் எழுந்துள்ளது என கூறிய அவர்,  ஆனால் கர்நாடகாவில் தற்போது வரை அத்தகைய நிலை உருவாகவில்லை என்றும், ஆனால் நாங்கள் நிச்சயமாக  இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொதுச்சுகாதார திட்டங்களை முறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். மத அரசியல் மற்றும் வேறு எந்த விதமான கூட்டத்தையும் கூட்ட அனுமதிக்கப்படாது என்ற அவர், சமூக இடைவெளியே ஒரு தீர்வாக இருக்கும் என்றார். இந்நிலையில் பொதுமக்களுக்கு மாநில அரசு மிகுந்த எச்சரிக்கை விடுத்துள்ளது. நீங்கள் மற்றொரு ஊரடங்கை விரும்பவில்லை என்றால், மாநில அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநில முதலமைச்சர் எடியூரப்பா எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

click me!