சென்னையில் கைமீறிப்போகும் கொரோனா..?? கொத்துக் கொத்தாக தாக்கும் கொடூரம்..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 5, 2020, 1:49 PM IST
Highlights

சென்னையில் மட்டும் இதுவரை 166 பேர் உயிரிழந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

ஒட்டுமொத்த உலகையும் கொரோனா கபளீகரம் செய்துவரும் நிலையில், சென்னையின் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஒரே நாளில் ஆயிரம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜூன் 5ஆம் தேதி காலை 8 மணி நிலவரப்படி சென்னையில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 693 ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவல் சென்னைவாசிகளை மிகவும் கலக்கமடைய வைத்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது, அதிலும் இந்தியாவில் வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது, கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 7ஆவது இடத்திற்கு உயர்ந்துள்ளது. இதுவரை நாடு முழுவதும் 2 லட்சத்து 27 ஆயிரத்து 29 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 6363 பேர் உயிரிழந்துள்ளனர். இது ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்நிலையில்  மும்பைக்கு அடுத்தபடியாக சென்னையில் கொரோனா தாக்கம்  தீவிரமடைந்துள்ளது. 

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1384 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது, அவர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 1,072 பேர் ஆவர். இதுவரை தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக  27,256 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் நேற்று ஒரே நாளில் 585 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 14,901 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 12,132 பேருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 12 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர், இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 220 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 18,693 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் அதில் இதுவரை  9,392 பேர் குணமடைந்துள்ளனர் என்றும், 8,947 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், சென்னையில் மட்டும் இதுவரை 166 பேர் உயிரிழந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில்  3,388 பேருக்கும்,  தண்டையார்பேட்டை மண்டலத்தில் 2,261 பேருக்கும்,  தேனாம்பேட்டை மண்டலத்தில் 2,136 பேருக்கும் கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,123 பேருக்கும், திருவிக நகர் மண்டலத்தில் 1,855 பேருக்கும், அண்ணா நகர் மண்டலத்தில் 1,660 பேருக்கும், அடையாறு மண்டலத்தில் 1,042 பேருக்கும், வளசரவாக்கம் மண்டலத்தில் 975 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் மிகக் குறைந்த அளவு மணலியில் 299 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநரகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில்  50.8%  பேர் குணமடைந்துள்ளனர், இதில் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 0.8 சதவீதமாக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.  சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அடுத்த ஒரு மாதத்திற்கு அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், போதிய சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள கொரோனா நோய் தடுப்பு சிறப்பு அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணன்,  இதை கடைபிடித்தால் மட்டுமே நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முடியும் எனவும் கூறியுள்ளார். 
 

click me!