24 மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவினை தெரிவிக்க வேண்டும்..!! பரிசோதனை மையங்களுக்கு மாநகராட்சி அதிரடி..!!

By Ezhilarasan BabuFirst Published Jul 22, 2020, 6:14 PM IST
Highlights

கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைகளை துல்லியமான முறையில் மேற்கொண்டு முடிவினை 24 மணி நேரத்தில் தெரிவிக்க வேண்டும்.
 

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் அனுமதி பெற்ற தனியார் பரிசோதனை மையங்களின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது. சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆணையர் அவர்கள் தெரிவித்ததாவது:- பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் அனுமதி பெற்ற 35 பரிசோதனை மையங்கள் உள்ளன. இவற்றில் 12 அரசு பரிசோதனை மையங்களும், 23 தனியார் பரிசோதனை மையங்களும் உள்ளன. இம்மையங்களில் பரிசோதனைக்கு வரும் நோயாளிகளின் விவரங்கள் மற்றும் தகவல்களை எவ்வாறு சேகரிக்க வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் பல்வேறு வழி முறைகளை வகுத்துள்ளது. 

அவ்வாறு மையங்களில் பரிசோதனை செய்துகொள்ள  வருகைதரும் நோயாளிகளின் முழு விவரங்கள் மற்றும் தகவல்களை கட்டாயம் தெரிவித்தல், சோதனை செய்ய வருபவர்களின் சுய விவரங்களை சேகரித்து அவர்களின் கையொப்பம் பெறுதல், குறிப்பாக பரிசோதனைக்கு வருபவர்களின் பெயர் அவரின் முழு முகவரி (அட்ரஸ் புரூப்) வயது, பாலினம் அவர்களின் தொழில் விவரம் மற்றும் குடும்பத்தினர் கடந்த 15 நாட்களில் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களின் விவரங்கள், அவர்களுக்கு ஏற்கனவே உள்ள நோய்களின் விபரங்கள் ஆகியவற்றை கட்டாயம் குறிப்பிட வேண்டும். இந்த விபரங்கள்  அனைத்தையும் பரிசோதனை மையங்கள் மாநகராட்சிக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டிருப்பவரின் தொடர்புகளை மாநகராட்சி எளிதில் கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க முடியும். மேலும் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைகளை துல்லியமான முறையில் மேற்கொண்டு முடிவினை 24 மணி நேரத்தில் தெரிவிக்க வேண்டும். 

பரிசோதனை மையங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் தொழில்நுட்பத் தகுதி உடையவர்களாக இருக்க வேண்டும், சென்னையில் நாள்தோறும் 10 ஆயிரத்திற்கும் மேல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையில் இதுவரை 5 லட்சத்து 4 ஆயிரத்து 460 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள, 6 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். மேலும் 12,000 தன்னார்வ களப்பணியாளர்கள், வீடுகள்தோறும் சென்று காய்ச்சல் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ள அனைத்து வழிமுறைகளையும் தவறாமல் பரிசோதனைக் கூடங்கள் பின்பற்ற வேண்டும். பரிசோதனைக் கூடங்களில் ஐ.சி.எம்.ஆர் வழிமுறைகளை பின்பற்றி அவ்வப்போது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உதவிகளை வழங்க வேண்டும். 

மேலும் பரிசோதனை மையங்களின் வாயில்களில் ஐ.சி.எம்.ஆர் வழிமுறைகளைப் பின்பற்றி பதாகைகள் வைக்கப்பட வேண்டும், தனியார் மருத்துவமனைகளில் மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீடுகளுக்குச் சென்று கொரோனா வைரஸ் தொற்றும் பரிசோதனை சேகரிக்கும் பணியாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதா என்பதை அந்தந்த பரிசோதனை மையங்கள் உறுதி செய்ய வேண்டும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

 

click me!