வேல் யாத்திரையால் கொரோனா பரவல்..?? தமிழக டிஜிபி பகீர் குற்றச்சாட்டு... 135 பாஜகவினர் மீது வழக்கு பதிவு..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 10, 2020, 1:38 PM IST
Highlights

காவல் துறையினரின் அனுமதி பெறாமல், பாஜகவினர் வேல் யாத்திரையை நடத்தியது பொதுமக்களுக்கு கொரோனா பரவ காரணமாக அமைந்தது. பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாதது, காவல்துறையினரிடம் தவறாக நடந்து கொண்டது, பொதுமக்களுக்கு இடையூறு செய்தது போன்ற பல்வேறு குற்றங்களுக்காக இதுவரை பாஜகவினர் 135 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பாஜக நடத்திய வேல் யாத்திரையின்போது பலருக்கு கொரோனா தொற்று ஏற்படுத்திய குற்றத்திற்காக  மொத்தம் 135  பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக டிஜிபி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் வியூகங்களில் தீவிரம் காட்டி வருகின்றது. அந்தவகையில் தமிழக பாஜக  இந்து உணர்வாளர் களையும், இந்து சமூக வாக்காளர்களையும் ஈர்க்கும் வகையில் வேல் யாத்திரை என்ற பெயரில்  முருகனின் அறுபடை வீடுகளை நோக்கி யாத்திரையை நடத்தி முடிந்துள்ளது. இந்த யாத்திரை எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு பொது மக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. வட மாநிலங்களைப் போல தமிழகத்திலும் மத அரசியலை திணிக்க பாஜக முயற்சி செய்கிறது எனவும், இந்த வேல் யாத்திரையின் மூலம் பாஜக மத உணர்வுகளைத் தூண்ட முயற்சி செய்கிறது எனவும் விமர்சிக்கப்பட்டது.

அதேநேரத்தில் இந்த யாத்திரைக்கு முதலில் அனுமதி மறுத்த தமிழக அரசு பின்னர் அதை செயல் அளவில் அனுமதித்தது. ஆனால் ஏற்கனவே இந்த யாத்திரை அரசியல் உள்நோக்கத்துடன் நடத்தப்படுவதாக தமிழக காவல்துறை டிஜிபி தரப்பில் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது. இது ஒருபுறமிருக்க சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி மாதம் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட போவதாக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்திருந்த போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என பத்திரிக்கையாளர் வாராகி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கொரோனா தொற்று குறையும் வரை தமிழகத்தில் எந்த போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ, ஊர்வலங்களோ நடத்த அனுமதிக்கக் கூடாது என காவல் துறைக்கு உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவையும் மீறி தமிழகத்தில் ஊர்வலங்கள் நடந்ததைத் தொடர்ந்து, காவல்துறையினருக்கு எதிராக அவர் நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடர்ந்தார், 

அந்த வழக்கில் காவல்துறை டிஜிபி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு காவல்துறை அனுமதி வழங்காத போதும், நீதிமன்ற உத்தரவை மீறி வேல் யாத்திரையை பாஜக மாநில தலைவர் எல் .முருகன் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது. காவல் துறையினரின் அனுமதி பெறாமல், பாஜகவினர் வேல் யாத்திரையை நடத்தியது பொதுமக்களுக்கு கொரோனா பரவ காரணமாக அமைந்தது. பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாதது, காவல்துறையினரிடம் தவறாக நடந்து கொண்டது, பொதுமக்களுக்கு இடையூறு செய்தது போன்ற பல்வேறு குற்றங்களுக்காக இதுவரை பாஜகவினர் 135 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தியதாக இதுவரை 1,741 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடதக்கது. 
 

click me!