கொரோனாவை கட்டுப்படுத்த இது ஒன்றுதான் தீர்ப்பு.. புதிதாக பதவியேற்றுள்ள அரசுக்கு ராமதாஸ் கொடுக்கும் ஐடியா..!

By vinoth kumarFirst Published May 13, 2021, 4:47 PM IST
Highlights

பொது சுகாதார வல்லுநர்கள் வழங்கிய அறிவுரைகளை இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் கடைபிடித்திருந்தால் தமிழ்நாட்டிலும், பிற மாநிலங்களிலும் கொரோனா பரவலும், உயிரிழப்பும் மோசமாகாமல் தடுத்திருந்திருக்க முடியும்.

தமிழ்நாட்டில் அடுத்த சில மாதங்களுக்கு முக்கியமற்ற பிற பணிகளை முதல்வரும், அமைச்சர்களும் ஒதுக்கி வைத்துவிட்டு, கொரோனா தடுப்பு மற்றும் நோயாளிகளுக்கு மருத்துவம் அளிக்கும் பணியில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என  ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;-சென்னை ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் படுக்கைகள் கிடைக்காமல் 10 நோயாளிகள் அவசர ஊர்திகளில் காத்திருந்த நிலையிலேயே உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. தமிழ்நாடு முழுவதும்  கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது கவலையளிக்கும் விஷயமாகும்.

உலகின் அனைத்து நாடுகளையும் ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ் தமிழ்நாட்டிலும் அதன் தாக்கத்தைக் காட்டுவதை தடுக்க முடியாது. ஆனால், முறையான நோய்த்தடுப்பு மற்றும் மேலாண்மை மூலம் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால், அதற்கான பணிகள் தேசிய அளவிலும் மாநில அளவிலும் போதிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை என்பது தான் உண்மை.  உலக சுகாதார நிறுவனத்தால் அமைக்கப்பட்ட கொரோனா படிப்பினைகளுக்கான பன்னாட்டுக்குழு (The Independent Panel for Pandemic Preparedness & Response - IPPPR) நேற்று வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையை நான் படித்தபோது, இந்த உண்மையை உணர்ந்துகொள்ள முடிந்தது.

பொது சுகாதார வல்லுநர்கள் வழங்கிய அறிவுரைகளை இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் கடைபிடித்திருந்தால் தமிழ்நாட்டிலும், பிற மாநிலங்களிலும் கொரோனா பரவலும், உயிரிழப்பும் மோசமாகாமல் தடுத்திருந்திருக்க முடியும். முழு ஊரடங்கை கடுமையாக செயல்படுத்த வேண்டும், கொரோனா சோதனைகளை அதிகரிக்க வேண்டும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட வேண்டும், முகக்கவசம் அணிவதை தீவிரப்படுத்த வேண்டும், தனிமனித இடைவெளியை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்டவை தான் பொது சுகாதார வல்லுநர்கள் வலியுறுத்திய விஷயங்கள் ஆகும்.

தமிழ்நாட்டிலும் இத்தகைய ஆலோசனைகள் வழங்கப்பட்டன. கடந்த ஆண்டில் கொரோனா முதல் அலை ஏற்பட்ட நாளிலிருந்து நானும் இது குறித்த ஆக்கப்பூர்வ யோசனைகளை வழங்கி வருகிறேன். ஆனால், அவற்றில் பெரும்பாலானவை பின்பற்றப்படாதது தான் நிலைமை மோசமானதற்கு காரணம். சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை எந்த மாவட்டத்திலும் மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை. பல மருத்துவமனைகளில் தாழ்வாரங்களில் நோயாளிகளை படுக்க வைத்து சிகிச்சை அளிக்கும் அவலம் இன்னும் தொடர்கிறது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் எந்த நேரமும் 50-க்கும் மேற்பட்ட அவசர ஊர்திகள் நோயாளிகளை சுமந்து கொண்டு நிற்கின்றன. உயிருக்கு ஆபத்தான நிலையில், ஆக்சிஜன் தேவைப்படும் நிலையில் உள்ள அவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய படுக்கைகள் இல்லை. அதனால் தான் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. பல மருத்துவமனைகளில் நிகழும் உயிரிழப்புகள் வெளியில் தெரிவிக்கப்படாமல் மறைக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் புதிதாக பதவியேற்றுள்ள அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்தால் தான் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முடியும். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தல், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பைத் தடுக்க நடவடிக்கை எடுத்தல் என இருமுனைகளில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உயிரிழப்புகளைத் தடுப்பதற்காக மின்னல் வேகத்தில், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை ஏற்படுத்துதல், ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்துகளின் தட்டுப்பாட்டைப் போக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு முன்வர வேண்டும். இவை அடுத்த சில நாட்களில் செய்யப்பட வேண்டும்.

நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துவது தான் முதன்மைப் பணியாக இருக்க வேண்டும். அதற்கான முதல் நடவடிக்கை ஊரடங்கை கடுமையாக்குவது தான். பொதுமக்கள் எவரும் வீடுகளை விட்டு வெளியில் வரக்கூடாது என்பதற்காகத் தான் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், பெரும்பான்மையான மக்கள் காரணமே இல்லாமல் சாலைகளிலும், தெருக்களிலும் நடமாடிக்கொண்டிருக்கின்றனர். நோயைக் கட்டுப்படுத்த கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டிய மக்கள் கட்டுப்பட மறுக்கின்றனர். அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள காவல்துறையினரும், அதிகாரிகளும் கடமை தவறுகின்றனர்.

தமிழ்நாட்டில் நோய்ப்பரவல் விகிதம் 21 விழுக்காட்டுக்கும் கூடுதலாக உயர்ந்துவிட்ட நிலையில், சாலைகளிலும், தெருக்களிலும் ஒரு நேரத்தில் 1,000 பேர் நடமாடினால், அவர்களில் 210 பேருக்கு கொரோனா நோய் பாதிப்பு இருக்கும். அவர்களில் ஒருவர் மூலம் 1.8 பேருக்கு நோய் பரவக்கூடும் என்பதால், ஒரே நேரத்தில் ஒரே பகுதியில் 400 பேருக்கு புதிதாக தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளது. இந்த உண்மைகளை உணர்ந்து ஊரடங்கைக் கடுமையாக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஏழரை கோடி மக்கள்தொகை கொண்ட தமிழ்நாட்டில் இன்னும் 70 லட்சம் பேருக்குக் கூட தடுப்பூசி போடப்படவில்லை. தடுப்பூசி அதிக அளவில் போடப்பட்ட நாடுகளில் தான் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே, கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை அரசு விரைவுபடுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் அடுத்த சில மாதங்களுக்கு முக்கியமற்ற பிற பணிகளை முதல்வரும், அமைச்சர்களும் ஒதுக்கி வைத்துவிட்டு, கொரோனா தடுப்பு மற்றும் நோயாளிகளுக்கு மருத்துவம் அளிக்கும் பணியில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். இத்தகைய பணிகளில் அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன பணியாளர்கள், உயர்கல்வி மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். சுனாமி தாக்குதலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் மீட்புப் பணிகள் எந்த அளவுக்கு தீவிரமாக மேற்கொள்ளப்பட்டனவோ, அந்த அளவுக்கு இப்போதும் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு, கொரோனா இல்லாத தமிழ்நாட்டை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

click me!