கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பணி.. எதிர்க்கும் ஆசிரியர் சங்கங்கள்.. அமைச்சர் சொன்ன பூஸ்ட் வார்த்தை..!

By Asianet TamilFirst Published May 27, 2021, 8:29 AM IST
Highlights

கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பணியில் விருப்பமுள்ள ஆசிரியர்களை ஈடுபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில் யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் செயல்படவில்லை. இடையில் ஒரு மாதம் மட்டுமே 9 முதல் 12-ஆம் வகுப்புகளுக்காக பள்ளிகள் செயல்பட்டன. ஆனால், கொரோனா இரண்டாம் அலை ஏற்பட்டதால், மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. இனி கொரோனா தாக்கம் குறைந்தால்தான் பள்ளிகள் செயல்படும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. வேலையே இல்லாவிட்டாலும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் முழு சம்பளம் வழங்கப்படுவதாகக் கூறி, அவர்களுடைய சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்றும் அதை கொரோனா பாதிப்புக்கு செலவிட வேண்டும் என்ற கோரிக்கை சமூக ஊடகங்களில் தொடர்ந்து வலியுறுத்தப்படுகின்றன.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ‘சம்பளம் குறைப்பு பற்றி முதல்வருடன் கலந்து பேசி அறிவிப்போம்’ என்று தெரிவித்திருந்தார். அமைச்சரின் இந்தக் கருத்துக்கே ஆசிரியர் சங்கங்கள் கொந்தளித்தன. ஆனால், ‘சம்பளம் குறைப்பு என்ற வதந்திக்கெல்லாம் பதில் அளிக்க தேவையில்லை’ என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில் பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு பணிகள் ஒதுக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகின. இதற்கும் ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறைக்கு புகார் மனுக்களும் அனுப்பப்பட்டன.
இந்நிலையில் இதுபற்றி தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசினர்.  “கொரோனா தடுப்பு பணியில் ஆசிரியர்களைப் பயன்படுத்துவது தொடர்பாக சுற்றிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக புகார்கள் வந்தன. அதில் விருப்பமுள்ள ஆசிரியர்களை, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில் யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது.” என்று தெரிவித்துள்ளார். 

click me!