கொரோனா அச்சுறுத்தலா இருக்கு... பேரறிவாளனுக்கு நீண்ட விடுப்பு கொடுங்க.. ஸ்டாலினுக்கு அற்புதம்மாள் வேண்டுகோள்!

By Asianet Tamil  |  First Published May 18, 2021, 9:04 PM IST

கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில்,. சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு நீண்ட பரோல் விடுப்பு அளிக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார். 
 


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டை 7 பேர் அனுபவித்து வருகிறார்கள். கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் அடிக்கடி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வருகிறார். அவருடைய உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு பல முறை பரோல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பேரறிவாளன் தன்னை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே நாடெங்கும் கொரோனா இரண்டாவது பரவல் அலையால் தொற்றும் மரணங்களும் அதிகரித்துள்ளன.


எனவே, பெருந்தொற்றால் சிறைக்கைதிகள் பாதிக்கப்படாமல் இருக்கவும் தேவைப்பட்டால் பரோல் விடுப்பு வழங்க வேண்டும் கோரிக்கை வலுத்து வருகிறது. பேரறிவாளன் ஏற்கனவே நீரிழிவு, சிறுநீரக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டடுள்ளவர் என்பதால். அவருக்கு கொரோனா தொற்றும் அபாயம் உள்ளது. கொரோனா வைரஸ் உருபெற்றுள்ளதால் மரணங்களும் அதிகமாக நிகழ்கின்றன. இந்த அபாய நிலையைக் கருத்தில்கொண்டு பேரறிவாளனுக்கு நீண்ட பரோல் விடுப்பு அளிக்க வேண்டும் என்று அவருடைய தாயார் அற்புதம்மாள் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ட் விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “சிறைகளில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றும், மரணங்களும் மிகுந்த அச்சத்தைத் தருகிறது. ஏற்கனவே பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதால் அறிவுக்குத் தொற்று ஏற்படும் ஆபத்து உண்டு என சிறைத்துறை மருத்துவர்கள் அறிக்கை தந்துள்ளனர். மேலும், அறிவுக்குத் தடைப்பட்டுள்ள மருத்துவத்தைத் தொடர வேண்டியுள்ளது. இதனைக் குறிப்பிட்டு நீண்ட விடுப்பு வழங்கக் கோரி 10ஆம் தேதி மனு அனுப்பியுள்ளேன். உச்ச நீதிமன்றம் 90 நாட்கள் விடுப்பு வழங்கலாம் என 7ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது. எனவே, முதல்வர் மு.க. ஸ்டாலின் கனிவுடன் பரிசீலித்து விரைந்து நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொள்கிறேன்” என்று அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.
 

Latest Videos

click me!