அதிகரிக்கும் கொரோனா தொற்று... டாஸ்மாக் கடைகள் திறக்கும் நேரம் மாற்றம்..!

By Thiraviaraj RMFirst Published Aug 3, 2021, 10:38 AM IST
Highlights

மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மளிகை கடைகள், காய்கறி கடைகள், பேக்கரி மற்றும் டீக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது.


கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதனால் தமிழகத்தில் சில மாவட்டங்களில் படிப்படியாக கட்டுப்பாடுகள் அமலுக்கு கொண்டுவரப்படுகின்றன.  
   
இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தொற்று பாதுகாப்பு நடைமுறைகள் கடைபிடிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் வணிகர் சங்க பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது, மாவட்ட ஆட்சியர் சமீரன் ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளில் சில மாற்றங்கள் செய்து அறிவித்தார். அதன்படி, ’’மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மளிகை கடைகள், காய்கறி கடைகள், பேக்கரி மற்றும் டீக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

மீன் மற்றும் இறைச்சிக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மதுபான கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்கள் மற்றும் அருங்காட்சியகங்களில் சுற்றுலாபயணிகள் மற்றும் பொதுமக்கள் வருகைக்கு தடை விதிக்கப்படுகிறது. அனைத்து பூங்காக்களிலும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் பொதுமக்கள் வருகைக்கு தடை விதிக்கப்படுகிறது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து மால்கள் மற்றும் பன்னடுக்கு வளாகங்கள் ஞாயிற்றுக்கிழமை இயங்க தடை விதிக்கப்படுகிறது. மேலும் மால்களில் உள்ள உணவகங்களுக்கு ஏற்கனவே ஜூலை 31-ந் தேதி அன்று அறிவிக்கப்பட்ட நடைமுறைகள் பொருந்தும். பொள்ளாச்சி மாட்டுச்சந்தை நாளை  முதல் இயங்க தடை விதிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளையும் பொதுமக்கள் முறையாக பின்பற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!