20க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு.. மூன்றாம் அலை தொடங்கிவிட்டதா? பீதியில் பொதுமக்கள்..!

By vinoth kumar  |  First Published Jul 17, 2021, 4:51 PM IST

குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்படுவது குறித்து முழுமையான ஆய்வறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும், சூழ்நிலையை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.


புதுச்சேரியில் 2 நாட்களில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுச்சேரியில் கொரோனா 2வது அலையின் பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வரக்கூடிய சூழ்நிலையில் பொதுமக்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில், ஜூலை 15ம் தேதி கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 21 குழந்தைகளில் 16 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், ஒன்று முதல் 5 வயதுக்குட்பட்ட 12 குழந்தைகளும், 5 வயதுக்கு மேற்பட்ட 4 குழந்தைகளும் அடங்குவர்.

Tap to resize

Latest Videos

undefined

அதேபோல், 16ம் தேதி புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 13 குழந்தைகளில் 9 பேருக்கு கொரோனா இருப்பதாக தெரியவந்துள்ளது. இதில், 5 வயதுக்குட்பட்ட 7 பேர் என்றும், 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளில் 2 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. 

இதில், கொரோனா உறுதி செய்யப்பட்ட தாய்மார்களின் 4 குழந்தைகள் இருப்பதாகவும்  புதுச்சேரி சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பேசிய புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார்;- குழந்தைகளுக்கு தொற்று பரவுவதை கண்டு அச்சமடைய வேண்டாம். தொற்று பாதித்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க 60 படுக்கைகள் வென்டிலேட்டர்கள் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

இதனிடையே, கொரோனா தடுப்பு சீராய்வு கூட்டம் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய தமிழிசை 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கவலை அளிப்பதாக தெரிவித்தார். குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்படுவது குறித்து முழுமையான ஆய்வறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும், சூழ்நிலையை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். குழந்தைகளை வெளியில் கூட்டிச்செல்வதும், உறவினர்களை வீட்டுக்கு அழைப்பதும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என தமிழிசை கேட்டுக்கொண்டுள்ளார். 

click me!