ஒரே நாளில் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா.. ஊரடங்கே ஒரே வழி.? பயங்கர முடிவில் முதல்வர்..

By Ezhilarasan BabuFirst Published Mar 29, 2021, 2:05 PM IST
Highlights

கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் படிப்படியாக குறைந்து கட்டுக்குள் இருந்துவந்த நிலையில் தற்போது அதன் இரண்டாவது அலை இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது

மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 40  ஆயிரத்திற்கும் அதிகமானோர் புதிதாக வைரஸ் தோற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கும் முடிவுக்கு மாநில அரசு தள்ளப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா வைரஸ்  தடுப்பு பணிகுழுவும்  ஊரடங்கு அமல் படுத்த பரிந்துரைத்திருப்பதாக கூறப்படுகிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரசால் ஒட்டுமொத்த உலகமும் ஸ்தம்பித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் படிப்படியாக குறைந்து கட்டுக்குள் இருந்துவந்த நிலையில் தற்போது அதன் இரண்டாவது அலை இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது.  இதனால் மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் கொரோனாவால்  சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை ஏப்ரல் 4ஆம் தேதி வாக்கில் 3 லட்சத்தை தாண்டும் என ஏற்கனவே அம்மாநில சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அம்மாநிலத்தில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர்  வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மும்பையில் மட்டும் 7,000 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக கடந்த மார்ச் 26 அன்று 36,902  பேர் அதிக அளவில் பாதிப்பு பதிவாகி இருந்தது. ஆனால் தற்போது அதன் எண்ணிக்கை 40,414 ஆக பதிவாகி உள்ளது. இது அம்மாநில அரசை மிகவும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்நிலையில் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே மாநில தலைமைச் செயலாளர் சீதாராம் குண்டே மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் மீண்டும் மகாராஷ்டிராவில் முழு ஊரடங்கு விதிக்க வேண்டிய அவசியத்தை சுகாதாரத்துறை முதல்வரிடம் வலியுறுத்தி உள்ளது. இதனால் அடுத்த சில தினங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்க முதல்வர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை, ஆக்சிஜன் ஏற்பாடு மற்றும் வென்டிலேட்டர் குறித்தும் முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். 

ஞாயிற்றுக்கிழமை முதல் ஹிங்கோலி மாவட்டத்தில் ஒரு வார காலம் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. மார்ச் 29ஆம் தேதி காலை 7 மணி முதல் ஏப்ரல் 1, மதியம் 12 வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அப்பகுதியில் அத்தியாவசிய சேவைகள் பால், மளிகை,காய்கறி கடைகள் மற்றும் மருந்தகங்கள் தடையின்றி செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் மார்ச் 30 நள்ளிரவு முதல் ஏப்ரல் 8 வரை அவுரங்காபாத்தில் முழு ஊரடங்கு விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் பாரம்பரியம் மிக்க கழுதை ஊர்வலம் திருவிழாவுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
 

click me!