ஆளும் கட்சிக்கான எச்சரிக்கை மணி.. அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு குறித்து பகீர் கிளப்பும் தினகரன்..!

By vinoth kumarFirst Published Jun 16, 2020, 1:45 PM IST
Highlights

கொரோனா உயிரிழப்புகள் தமிழகத்தில் தான் குறைவு என்று முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் திரும்பத்திரும்ப கூறி வந்த நிலையில் நோய்த்தொற்றில் உயிரிந்தவர்கள் எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருகிறது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என  அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 
 

கொரோனா உயிரிழப்புகள் தமிழகத்தில் தான் குறைவு என்று முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் திரும்பத்திரும்ப கூறி வந்த நிலையில் நோய்த்தொற்றில் உயிரிந்தவர்கள் எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருகிறது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என  அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- ஊரடங்கைத் தாண்டி திட்டமிட்டுச் செய்ய வேண்டிய பணிகளில் தமிழக அரசு முழு கவனம் செலுத்த வேண்டும். கொரோனா உயிரிழப்புகள் தமிழகத்தில்தான் குறைவு என்று முதல்வரும், சுகாதாரத் துறை அமைச்சரும் திரும்பத் திரும்பக் கூறி வந்த நிலையில், நோய்த்தொற்றினால் பலியாவோர் எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டில் நாள்தோறும் அதிகரித்து வரும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அச்சமூட்டி வந்த நிலையில், தற்போது உயிரிழப்புகளும் வேகமாக உயரத் தொடங்கியிருக்கின்றன. அதிலும் ஜூன் 13 ஆம் தேதி 30 பேரைப் பலிவாங்கிய கொரோனா, அதற்கடுத்த நாள் 38 பேரின் உயிரைப் பறித்திருக்கிறது. தமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சமாக ஜூன் 15 ஆம் தேதி அன்று 44 பேர் கொரோனா தாக்கி மரணமடைந்திருக்கிறார்கள். இந்த உயிரிழப்புகளில் 11 பேர் கொரோனாவைத் தவிர, வேறெந்த நோய்களாலும் பாதிக்கப்படாதவர்கள். 10 பேர் 50 வயதிற்குக் குறைவானவர்கள். அவர்களிலும் 4 பேர் 40 வயதிற்கும் கீழே இருப்பவர்கள் என்ற புள்ளிவிவரங்கள் அச்சமூட்டுகின்றன.

கடந்த சில நாட்களாகவே வேறெந்த நோய்க்கும் ஆளாகாமல் கொரோனாவால் மட்டும் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பது, இதுவரை அரசுத் தரப்பில் சொல்லப்பட்ட காரணங்களை எல்லாம் பொய்யாக்கி வருகிறது. இதனை ஆட்சியாளர்கள் எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் மொத்தப் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் 70%க்கும் அதிகமாக உள்ள சென்னை மாநகரின் நிலைமையைச் சரி செய்ய ஊரடங்கு மட்டுமே போதாது என்பதுதான் தற்போதைய யதார்த்தம். உயிரிழப்போரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகும் நேரத்தில், ‘சோதனைகளை அதிகப்படுத்துவதால் பாதிப்பு அதிகம் தெரிகிறது’ என்று அதே பழைய பல்லவியைத் திரும்பத் திரும்ப ஆட்சியாளர்கள் பாடிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.

பாதிப்பின் வீரியத்தை வைத்து கர்நாடகா, கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களை ஒப்பிடும்போது நம்முடைய சோதனைகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்ற உண்மையை ஒப்புக்கொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும். கூடவே சிகிச்சை வசதிகளைப் பொறுத்தமட்டில் இன்னும் மேம்படுத்த வேண்டிய நிலையிலேயே தமிழகம் இருக்கிறது என்ற கண்ணெதிரே தெரிகிற உண்மையையும் பழனிசாமி அரசு பூசி மெழுக நினைக்கக்கூடாது.

அரசு ஆவணங்களில் காட்டப்படாமல் மறைக்கப்பட்டதாக சொல்லப்படும் 236-க்கும் அதிகமான மரணங்களைச் சேர்க்காமல், இதுவரை 479 உயிர்களை கொரோனாவால் நாம் இழந்துள்ள நிலையில், அதற்கான காரணங்களை உணர்ந்து, சரியான திட்டமிடுதலோடு அரசு எந்திரம் மொத்தமும் ஒருங்கிணைந்து செயல்படுவதே பாதிப்புகளைத் தடுக்க உதவும். மக்களின் ஒத்துழைப்போடுதான் கொரோனாவை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. அதே நேரத்தில் தங்களின் தவறுகள் எல்லாவற்றையும் மக்களின் தலையில் கட்டிவிட்டு ஆட்சியாளர்கள் தப்பிக்க நினைப்பதை ஏற்க முடியாது என பதிவிட்டுள்ளார். 

click me!