''சந்திப்புகள் சர்ச்சையாகும் சாபக்கேடு'' தரை தட்டி நிற்கும் தமிழக அரசியல்!

First Published May 25, 2017, 7:53 PM IST
Highlights
controversy meeting of tamilnadu politicians


கொந்தளிக்கும் கடலில் தத்தளிக்கும் கப்பலைப் போல தமிழக அரசியல் ஸ்திரத்தன்மை இழந்து கலவரமாகக் காணப்படுகிறது.

எட்டுத் திக்கும் கேக்கும் அளவுக்கு பேட்டி கொடுத்து தமிழக அரசியலை தொடர்ந்து அதிரச் செய்து வரும் ஓ.பன்னீர்செல்வம் அண்மையில் பிரதமரைச் சந்தித்து பெரும் விவாதப் பொருளாகவே வெடித்தது. 

எந்தப் பொறுப்பிலும் இல்லாத பன்னீர்செல்வத்தை பிரதமர் சந்திக்க வேண்டிய அவசியம் என்ன என்று மு.க.ஸ்டாலின் உள்பட எதிர்கட்சித் தலைவர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு தமிழக பா.ஜ.க. தலைவர்களுக்கு கொடைச்சல் குடுத்தனர். 

இக்கேள்விக் கணைகளுக்கு முதலில் இறையானவர் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எதிர்க்கட்சிகள் முன்வைத்த கேள்விகளுக்கு வெட்டு ஒன்னு துண்டு இரண்டு என்று பதிலளிக்க முடியாமல், ஓ.பி.எஸ். - பிரதமர் இடையேயான சந்திப்பின் காரணம் தனக்கு தெரியாது என்று கூறி எஸ்கேப் ஆகிவிட்டார். 

ஆனால் யாரை எப்போது சந்திக்க வேண்டும் என்பது பிரதமருக்குத் தெரியும் என்று காரம் குறையாமல் பதில் அளித்தார் தமிழிசை சவுந்திரராஜன். இப்படியாக சர்ச்சைக்குள்ளானது பன்னீர்செல்வத்தின் சந்திப்பு.

அதோடு விட்டதா சர்ச்சைப் புயல் இந்த முறை மை டர்ன் என்பதைப் போல எடப்பாடியும் பிரதமரை சந்தித்து விவாத்திற்கு உள்ளாகி உள்ளனர். மாநில அரசுக்கு அளிக்க வேண்டிய நிதியை கேட்டுப் பெறவே பிரதமரைச் சந்தித்தாக அவர் விளக்கம் அளித்தாலும், ஆட்சியை தொடர்ந்து தக்க வைக்கவே அவர் டெல்லி சென்றதாக தகவல் வெளியானது. 

இவை எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்து வந்த திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவர் மு.ஸ்டாலின் இன்று பிரதமர் மோடிக்கு எதிராக காட்டமான குற்றச்சாட்டுகளையே முன்வைத்தார். சோழிங்கநல்லூரில் இருக்கும் கோயில் குளத்தை தூர்வாரிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவின் இரு அணிகளிடையே மோடி கட்டப் பஞ்சாயத்து செய்து வருவதாக குற்றஞ்சாட்டினார். 

இப்படி ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். சந்திப்புகள் சர்ச்சைகளாக வெடித்துள்ள நிலையில், முதல் அமைச்சர் எடப்பாடியின் சந்திப்புக்கு இது தான் காரணம் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்திற்கு நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து விவாதிக்கவே, முதல்வருக்கு பிரதமர் மோடி நேரம் ஒதுக்கியதாகக் கூறி, அரைத்த மாவையே அரைத்திருக்கிறார். 

பிரதமரை சந்திப்பது கூட சர்ச்சையாகும் அளவுக்கு தமிழக அரசியல் தரைதட்டி நிற்பது சாபக்கேடு

click me!