வேலூர் அருகே மேல்மொணவூரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் முதற்கட்டமாக 142.16 கோடி மதிப்பீட்டில் 3,510 புதிய வீடுகள் கட்டுவதற்கான திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி, தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களின் குடும்பத்தினருக்கு விலையில்லா சமையல் எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும், முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு பணக்கொடை வழங்கப்படுகிறது. இந்த பணக்கொடை உயர்த்தி வழங்கப்படும். முகாம்களில் உள்ள 7,469 பழுதடைந்த வீடுகள் ரூ. 231 கோடி செலவில் கட்டித்தரப்படும். அவர்களுடைய குழந்தைகளின் கல்விக்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வாழ்வாதார மேம்பாட்டு நிதியாக ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக ஆண்டுதோறும் ரூ. 6 கோடி என ரூ. 3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தொழிற்கல்வி படித்து வரும் இலங்கைத் தமிழ் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும். ரேஷனில் விலையில்லாமல் அரிசி வழங்கப்படும். இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது, சொந்த நாட்டிற்கு செல்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க நாடாளுமன்ற உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் என உள்ளடக்கிய குழு அமைக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு சிறப்புத் திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனிடையே இலங்கை அகதிகள் முகாம், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என தமிழக அரசால் பெயர் மாற்றம் செய்யப்பட்ட அரசாணை வெளியிடப்பட்டது. அத்துடன் இலங்கை தமிழர் மேம்பாட்டுக்காக ரூபாய் 317 கோடியில் புதிய நலத் திட்டங்களை சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும் புதிய வீடுகள் கட்டித் தருதல், குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, குடிநீர் வசதி, சாலை வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக ரூ.317 கோடி ஒதுக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள 106 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்டும் திட்டத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. வேலூர் அடுத்த மேல்மொணவூரில் வசிக்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ளவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவும், இன்று வேலூரை அடுத்த அப்துல்லாபுரம் தொழிற்பயிற்சி நிலைய மைதானத்தில் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலந்துக்கொண்டு 220 இலங்கை தமிழர் குடும்பங்கள் உட்பட 3510 பேருக்கு குடியிருப்பு வீடுகள் கட்டும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து வேலூர் மேல்மொணவூரில் உள்ள இலங்கை தமிழர்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
undefined
முன்னதாக விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் இயக்கம் திமுக. கடந்த 10 ஆண்டு காலம் இலங்கை தமிழர்கள் குறித்து அதிமுக அரசு கவலைப்படவில்லை. திமுக அரசு பொறுப்பேற்றவுடன் இலங்கை தமிழர் நல வாழ்வு திட்டங்கள் துவக்கப்பட்டுள்ளது. முகாம்வாழ் தொழில்முனைவோர்களுக்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இலங்கை தமிழர்களுக்கான நலத் திட்டங்கள் மேலும் தொடரும். இலங்கை தமிழர் முகாம்களின் கட்டமைப்பு மேம்படுத்தப்படும். முகாம்களில் உள்ள இலங்கை தமிழ் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும். முகாம் வாழ் தமிழர்களுக்கு கோஆப் டெக்ஸ் மூலம் தரமான ஆடைகள் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தமிழக தமிழர்களையும் இலங்கை தமிழர்களையும் பிரிப்பது கடல் மட்டுமே. தமிழர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் ஒரு தாய் மக்களே. இலங்கைத் தமிழர்கள் அகதிகள் அல்ல. எனவேதான் அகதிகள் முகாம் என்பதை மறுவாழ்வு முகாம் என மாற்றினோம். இலங்கை தமிழர்கள் ஆதரவற்றவர்கள் அல்ல. என்னை உங்கள் சகோதரனாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று நெகிழ்ச்சியாக தெரிவித்தார்.