மன்மோகன் சிங்கை மீண்டும் எம்.பி.யாக்க முயற்சி... ராஜஸ்தானிலிருந்து தேர்வு செய்ய காங்கிரஸ் முடிவு?

By Asianet TamilFirst Published Jun 28, 2019, 3:07 PM IST
Highlights

ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர் அண்மையில் காலமானார். அவருடைய மறைவால் காலியான இடத்துக்கு நடக்கும் தேர்தலில் மன்மோகன் சிங்கை நிறுத்தி தேர்வு செய்ய காங்கிரஸ் கட்சி முயற்சி மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்காக திமுகவிடம் ஒரு மாநிலங்களவை இடத்தை காங்கிரஸ் கேட்டுவருவதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், மன்மோகன் சிங்கை ராகஸ்தானிலிருந்து மாநிலங்களவைக்கு அனுப்பும் முயற்சியை காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது.


முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 1991-ம் ஆண்டு முதல் அஸ்ஸாமிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுவந்தார். கடந்த 28 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக இருந்த மன்மோகன் சிங் பதவிக்காலம் அண்மையில் முடிவுக்கு வந்தது. அஸ்ஸாமிலிருந்து மன்மோகன் சிங்கை தேர்வு செய்ய காங்கிரஸ் கட்சிக்கு போதுமான அளவு எண்ணிக்கை இல்லாமல் போனதால் மன்மோகனை மாநிலங்களவைக்குத் தேர்வு செய்ய முடியவில்லை.
மேலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் உடனடியாக மாநிலங்களவைத் தேர்தல் இல்லாததால்,  தமிழகத்தில் காலியாகும் 6 இடங்களில் திமுகவிடம் ஒரு இடத்தை காங்கிரஸ் கட்சி கேட்டுவருவதாக செய்திகள் வெளியாகின. இது பற்றி இரு கட்சிகளும் வெளிப்படையாக எதையும் அறிவிக்காத நிலையில், ஊகங்களாக செய்திகள் வெளியாகின.


இந்நிலையில் மன்மோகன் சிங்கை ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து தேர்வு செய்வதற்கான முயற்சிகளை தொடங்கியிருப்பதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர் அண்மையில் காலமானார். அவருடைய மறைவால் காலியான இடத்துக்கு நடக்கும் தேர்தலில் மன்மோகன் சிங்கை நிறுத்தி தேர்வு செய்ய காங்கிரஸ் கட்சி முயற்சி மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்கு போதுமான எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால், மன்மோகன் சிங்கை தேர்வு செய்வதில் பிரச்னை இருக்காது என்றும் காங்கிரஸ் கட்சி கருதுகிறது. இதன்மூலம் தமிழகத்திலிருந்து மன்மோகன் சிங் தேர்வு செய்யப்படுவார் என்ற தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. தமிழகத்தில் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு தலா 3 இடங்கள் கிடைக்கும். 

click me!