திமுக அமுக்கிய காங்கிரஸ் தொகுதிகள்... அதிருப்தியில் காங்கிரஸ் தலைவர்கள்!

By Asianet TamilFirst Published Mar 16, 2019, 6:25 AM IST
Highlights

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பாரம்பரியமாகப் போட்டியிடும் தொகுதிகள் கிடைக்காததால், தேர்தலில் போட்டியிட நினைத்த அக்கட்சித் தலைவர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.
 

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய தொகுதிகள் ஒதுக்கி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்தப் பட்டியலில் காங்கிரஸ் கட்சி பாரம்பரியமாகப் போடியிடும் திருநெல்வேலி, திண்டுக்கல், மயிலாடுதுறை, தென்காசி போன்ற தொகுதிகள் இடம் பெறவில்லை.
காங்கிரஸ் சார்பில் விரும்பி கேட்கப்பட்டிருந்த தென் சென்னை, ஈரோடு, காஞ்சிபுரம், அரக்கோணம் போன்ற தொகுதிகளையும் திமுக வழங்கவில்லை. ஈரோடு தொகுதியில் தான்தான் வேட்பாளர் பல மாதங்களுக்கு முன்பே சொல்லி பணிகளைத் தொடங்கியிருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்குக் கேட்ட தொகுதி கிடைக்கவில்லை. அந்தத் தொகுதி மதிமுகவுக்கு வழங்கப்பட்டுவிட்டது. ஈரோடுக்கு பதில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட இளங்கோவன் ஆர்வம் காட்டினார். அந்தத்  தொகுதியையும் திமுகவே வைத்துக்கொண்டது.
அரக்கோணம் தொகுதியை காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் நாசே ராமச்சந்திரனுகாக அக்கட்சி கேட்டது. ஆனால், அத்தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகன் போட்டியிடப் போகிறார் என திமுக கொடுக்க மறுத்துவிட்டது. மாறாக அரக்கோணத்துக்குப் பதிலாக ஆரணி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியுள்ளது. மயிலாடுதுறை தொகுதியைக் குறி வைத்து முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை இரண்டு மாதங்களுக்கு முன்பே முடுக்கிவிட்டிருந்தார். எந்தக் கூட்டணியில் இருந்தாலும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதி இது. ஆனால், இந்த முறை இத்தொகுதியை திமுகவே வைத்துக்கொண்டது.
இதேபோல காஞ்சிபுரம், தென்காசி ஆகிய தனி தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கேட்டு பிடிவாதம் பிடித்தது. ஆனால், காங்கிரஸ் கட்சி கேட்காத திருவள்ளூர் தனி தொகுதி அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நடிகை குஷ்பு, கராத்தே தியாகராஜன் ஆகியோர் தென் சென்னையில் போட்டியிட விரும்பினர். ஆனால், சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளையும் திமுகவே வைத்துக்கொண்டது.
காங்கிரஸ் விரும்பி கேட்ட தொகுதிகளில் திருச்சி, கரூர், கிருஷ்ணகிரி ஆகிய மூன்று தொகுதிகள் மட்டுமே கிடைத்திருக்கின்றன என்கின்றன காங்கிரஸ் வட்டாரங்கள். இந்த மூன்று தொகுதிகளையும் பெற திமுகவும் கடும் முயற்சி செய்தது. ஆனால், காங்கிரஸ் மேலிடமே இந்தத் தொகுதிகளை கேட்டதால், திமுக விட்டுக் கொடுத்தது. அதற்கு பதிலாக காங்கிரஸ் கட்சி பாரம்பரியமாக போட்டியிடும் தென்காசி, திருநெல்வேலி, மயிலாடுதுறை, திண்டுக்கல், அரக்கோணம் ஆகிய தொகுதிகளை திமுக வைத்துக் கொண்டது என்கின்றன காங்கிரஸ் வட்டாரங்கள். 
இதனால், தேர்தலில் போட்டியிட முடியாமல் போயுள்ள காங்கிரஸ் தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். 

click me!