மாநிலங்களவை தேர்தல்... காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிப்பு!!

By Narendran SFirst Published May 29, 2022, 7:37 PM IST
Highlights

தமிழகத்திலிருந்து மாநிலங்களவை தேர்தலுக்குக் காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்திலிருந்து மாநிலங்களவை தேர்தலுக்குக் காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உட்பட மொத்தம் 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவி விரைவில் காலியாக உள்ளது. இதை அடுத்து புதிய மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் ஜூன் 10 ஆம் தேதி நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் மற்றும் அதிமுகவின் நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகியோரின் பதவிக்காலம் நிறைவடைகிறது. தற்போது தமிழக சட்டசபை உள்ள உறுப்பினர்களை வைத்துப் பார்க்கும்போது, காலியாகும் 6 இடங்களில் 4 இடங்கள் திமுகவுக்கும், 2 இடங்கள் அதிமுகவுக்கும் செல்லும்.

இதில் திமுக 3 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு ஒரு இடமும் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் தஞ்சை சு.கல்யாண சுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், காங்கிரஸ் சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்று முடிவு செய்வதில் குழப்பம் நிலவி வந்தது. வேட்புமனு தாக்கல் தேதி தொடங்கிய பின்னரும், காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம் நிலவி வந்தது.

காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் போட்டியிடலாம் என்று தகவல் வெளியான போதிலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்தச் சூழலில் ராஜய்சபா வேட்பாளரைத் தேர்வு செய்யக் காங்கிரஸ் எம்எல்ஏ கூட்டம் இன்று நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி தமிழகத்திலிருந்து ராஜ்ய சபா தேர்தலுக்குக் காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ப. சிதம்பரம் நாளை வேட்பு மனுத் தாக்கல் செய்கிறார். தமிழ்நாட்டில் மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்வு செய்ய வரும் ஜூன் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.      

click me!