பாஜகவை வீழ்த்த காங்கிரஸின் புதிய வியூகம்!! பலனளிக்குமா? பல்பு வாங்குமா?

First Published Mar 18, 2018, 10:50 AM IST
Highlights
congress plans to defeat bjp


அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த புதிய உத்தியை முன்னெடுக்கப் போவதாக அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஒத்த கருத்துகளைக் கொண்ட அனைத்து கட்சிகளையும் ஓரணியில் திரட்டி பாஜகவை வீழ்த்துவதற்கான செயல்திட்டத்தை வகுக்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தவிர விவசாயிகள் நலன் தொடர்பான மற்றொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்ற பிறகு காங்கிரஸின் முதல் தேசிய மாநாடு டெல்லியில் நடைபெற்றது. கடைநிலை நிர்வாகிகள் முதல் மூத்த தலைவர்கள் வரை அனைவரும் அதில் பங்கேற்று கட்சியை வலுப்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் மாநாட்டின் இரண்டாம் நாளான சனிக்கிழமையன்று சோனியா, ராகுல் ஆகியோர் உரையாற்றினர். அதைத் தொடர்ந்து, இரண்டு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் அரசியல் உத்தி தொடர்பான தீர்மானம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பாஜகவின் தொடர் தேர்தல் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்து காங்கிரஸ் மீண்டும் மத்தியில் அரியணை ஏற செயல்திட்டத்தை வகுப்பது குறித்த அம்சங்கள் அதில் இடம்பெற்றிருந்தன. கட்சி நிர்வாகிகள் விவாதம் நடத்தியபின் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள்:

நமது நாட்டின் அரசியல்சாசன மாண்புகள் மீது சமீபகாலமாக தாக்குதல் நடத்தப்படுகிறது. அனைவரது கருத்துரிமைகளும் நசுக்கப்பட்டுகின்றன. இந்த மண்ணில் வாழ்பவர்கள் எந்த மதத்தைச் சாரந்தவர்களாக இருந்தாலும் சரி; அனைவருக்குமான இயக்கமாக காங்கிரஸ் இருக்கும் என காந்தி தெரிவித்தார். அத்தகைய பன்முகக் கலாசாரக் கொள்கையைக் கொண்ட காங்கிரஸ் கட்சி, எதிர்வரும் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கு புதிய உத்தியை முன்னெடுக்கும். ஒத்த கருத்துடைய கட்சிகளை ஒருங்கிணைத்து அத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் நலன்:

இதைத் தொடர்ந்து விவசாயிகள் நலன் மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான மற்றொரு தீர்மானமும் காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. அதில், கடந்த 2009-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, 3.2 கோடி விவசாயிகள் பலனடைந்தனர். ஆனால், தற்போதைய மோடி ஆட்சியில் விவசாயிகளை விட காப்பீட்டு நிறுவனங்கள்தான் அதிக பலனடைந்து வருகின்றன. மீண்டும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பயிர்க் கடன் தள்ளுபடி தொடர்பான சிறப்புத் திட்டம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!