பாஜகவை அடுத்து எம்ஜிஆர் புகைப்படத்தைப் பயன்படுத்தும் காங்கிரஸ்... எம்.ஜி.ஆருக்கு புது டிமாண்ட்..!

By Asianet TamilFirst Published Nov 15, 2020, 8:38 PM IST
Highlights

எம்.ஜி.ஆர். படத்தை பாஜக பயன்படுத்த தொடங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியும் எம்.ஜி.ஆர். படத்தைத் பயன்படுத்தி போஸ்டர் அடித்துள்ளது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தமிழக பாஜக நடத்தி வரும் வேல் யாத்திரை தொடர்பான பாடலில் எம்.ஜி.ஆர். படங்கள் இடம்பெற்றது சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு விளக்கம் அளித்த பாஜக தலைவர் எல்.முருகன், மக்களுக்கு நல்லது செய்த தலைவர் எம்.ஜி.ஆர்., மோடியும் மக்களுக்கு நல்லது செய்கிறார். அதனால், எம்.ஜி.ஆர். படத்தைப் பயன்படுத்துவதாகத் தெரிவித்தார். அக்கட்சியின் துணைத் தலைவர் அண்ணாமலை கூறும்போது. எம்.ஜி.ஆர். சிவன் மற்றும் முருக பக்தர் என்றும் அதனால், அவருடைய படத்தை பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

 
ஆனால் எம்.ஜி.ஆர். படத்தை பயன்படுத்த எதிர்ப்பு  தெரிவிக்கும் அதிமுக, அவர் அதிமுகவுக்கு மட்டுமே முழு உரிமையானவர் என்று பதிலடி கொடுத்தது. பாஜகவினர் எம்.ஜி.ஆர். படத்தைப் பயன்படுத்தும் பஞ்சாயத்தே இன்னும் முடிவடையாத நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியினரும் எம்.ஜி.ஆர். படத்தைப் பயன்படுத்தி போஸ்டர் அடித்துள்ளனர். சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் பிறந்த நாளையொட்டி மதுரையில் அச்சடிக்கப்பட்ட போஸ்டரில் எம்.ஜி.ஆர். செங்கோலை கார்த்தி சிதம்பரத்திடம் வழங்குவது போல் காங்கிரஸார் அச்சடித்துள்ளனர்.


இந்தப் புகழ்பெற்ற செங்கோல் படம், 1986-ம் ஆண்டில் மதுரையில் நடந்த மாநாட்டில் எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா வழங்கிய 6 அடி உயர செங்கோலாகும். அதைப் பெற்றுக்கொண்ட எம்.ஜி.ஆர்., அதே மேடையில் அதை ஜெயலலிதாவிடம் வழங்கினார். அந்தப் புகைப்படம் அதிமுகவில் மிகவும் பிரபலம். அந்தப் புகைப்படத்தைதான் தற்போது காங்கிஸார் உல்டா செய்துள்ளனர்.  இது அதிமுகவினரை கொந்தளிக்க வைத்துள்ள நிலையில், கூட்டணி கட்சியான திமுகவினரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது. 

click me!