சசிகலாவை முன்கூட்டியே விடுவிக்கக் கூடாது... கர்நாடகாவில் காங்கிரஸ் எதிர்ப்பு..? எடியூரப்பாவுக்கு தூது!

By Asianet TamilFirst Published Oct 16, 2019, 7:12 AM IST
Highlights

சசிகலா சட்டத்தை துஷ்பிரயோகம் செய்ததால், அவர்களை நன்னடத்தை அடிப்படையில் வெளியே விடக்கூடாது என்று காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி மனுவில் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்ய காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கர்நாடக முதல்வரிடம் காங்கிரஸ் கட்சி மனு அளித்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை  தண்டனை விதிக்கப்பட்டது. ஜெயலலிதா இறந்துவிட்ட காரணத்தால், வழக்கிலிருந்து பெயர் நீக்கப்பட்டது. கடந்த 2017 பிப்ரவரியிலிருந்து பெங்களூரு பரப்பன அஹ்ரஹார சிறையில் இவர்கள் தண்டனை அனுபவித்துவருகிறார்கள். அடுத்த ஆண்டு இறுதியில் சசிகலா உள்ளிட்டோர் விடுதலை ஆக வேண்டும். ஆனால், முன்கூட்டியே சசிகலா விடுவிக்கப்படுவார் என்று அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. சசிகலா, இளவரசியை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய கர்நாடக அரசுக்கு சிறைத்துறை நிர்வாகம் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


இந்நிலையில் சசிகலாவை முன்கூட்டியே விடுவிக்கக் கூடாது என்று கர்நாடக காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடக காங்கிரஸ் தொழிலாளர் பிரிவு செயலாளர் முத்து மாணிக்கம் என்பவர், முதல்வர் எடியூரப்பா, மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.


அந்தக் கடிதத்தில், சிறைச்சாலையில் வசதியாக இருக்க சிறைத்துறை டிஜிபியாக இருந்த சத்தியநாராயண ராவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக வெளியான செய்திகள், சசிகலா சிறையிலிருந்து வெளியே சென்று வரும் சிசிடிவி கேமரா காட்சிகள், அதுதொடர்பான சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி. ரூபாவின் நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சசிகலா சட்டத்தை துஷ்பிரயோகம் செய்ததால், அவர்களை நன்னடத்தை அடிப்படையில் வெளியே விடக்கூடாது என்று முத்துமாணிக்கம் மனுவில் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முத்துமாணிக்கம் கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் அனுமதியோடு இந்த மனுவை வழங்கினாரா அல்லது தனது விருப்பத்தின் பேரில் வழங்கினாரா என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை. அதேவேளையில் சசிகலா விடுதலைக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், அதிமுக, அமமுகவினர் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்திருக்கிறது.

click me!