சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கியிருக்கிறேனா...? நாங்குநேரியில் எகிறிய மு.க. ஸ்டாலின்!

By Asianet TamilFirst Published Oct 16, 2019, 6:46 AM IST
Highlights

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனிப்பட்ட முறையில் வெளிநாடு சென்றால் அதைப்பற்றி  எந்தக் கேள்வியும் இல்லை. ஆனால், முதல்வர் என்ற முறையில் சென்றதாலேயே அதைப்பற்றி கேட்கிறேன். ஆனால்  நான் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்காமல், என்னை விமர்சனம் செய்கிறார்.

சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கி வைத்திருப்பதை நிரூபித்துவிட்டால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை உடனே ராஜினாமா செய்துவிடுவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார். விக்கிரவாண்டி தொகுதியில் பிரசாரம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “மு.க.ஸ்டாலின் மக்களிடம் மனுக்களை பெறுகிறார். அதை வாங்கி என்ன செய்யப்போகிறார்? யாரிடம் கொடுக்கப் போகிறார்?” என்று பேசியிருந்தார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் நாங்குநேரியில் மு.க. ஸ்டாலின் பேசினார்.


 “செல்லும் இடங்களில் பொதுமக்களின் குறைகளைக் கேட்டு, கோரிக்கை மனுக்களை பெறுகிறேன். இப்படி மனுக்கள் வாங்குவடை விமர்சனம் செய்கிறார்கள். நான் பெறும் மனுக்கள் எல்லாம் திமுக ஆட்சி அமையும்போது உடனே பரிசீலிக்கப்பட்டு தீர்வு காணப்படும். அதுவரை இந்த மனுக்களைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுப்போம். அதைப் பற்றி சட்டப்பேரவையிலும் நாடாளுமன்றத்திலும் பேசி நிறைவேற்ற குரல் கொடுப்போம்” என்று ஸ்டாலின் பேசினார்.

 
மேலும் தேர்தல் பிரசாரத்தில் ஸ்டாலின் பேசும்போது, “அதிமுகவில் தற்போது 122 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். இந்த எம்.எல்.ஏ.க்கள் எப்போதாவது தொகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றிருக்கிறார்களா? மக்களின் பிரச்னைகளைக் கேட்டு இருக்கிறார்களா? உள்ளாட்சி தேர்தலை நடத்த இந்த ஆட்சியில் துப்பில்லை. உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல், பொதுமக்களின் அடிப்படை பிரச்னைகளை எப்படித் தீர்க்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.


இதேபோல தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, “மு.க. ஸ்டாலின் ஏன் லண்டன் செல்கிறார் என்பது பற்றி விளக்க வேண்டும்” என்று விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதில் அளித்த மு.க. ஸ்டாலின், “முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனிப்பட்ட முறையில் வெளிநாடு சென்றால் அதைப்பற்றி  எந்தக் கேள்வியும் இல்லை. ஆனால், முதல்வர் என்ற முறையில் சென்றதாலேயே அதைப்பற்றி கேட்கிறேன். ஆனால்  நான் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்காமல், என்னை விமர்சனம் செய்கிறார்.” என்று ஸ்டாலின் பேசினார்.
 மேலும் நாங்குநேரி தேர்தல் பிரசாரத்தில் ஸ்டாலின் பேசுகையில், “சுவிஸ் வங்கியில் நான் பணம் பதுக்கி வைத்திருப்பதாக கூறுகிறார்கள். இங்கே 8 ஆண்டுகளாக அதிமுக ஆட்சிதான் உள்ளது. மத்தியிலும் அவர்களுக்கு இணக்கமான ஆட்சிதான் உள்ளது. சுவிஸ் வங்கியில் நான் எவ்வளவு பணம் பதுக்கி வைத்திருக்கிறேன் என்பதை ஏன் நீங்கள் கண்டுபிடிக்கவில்லை?  அதை நிரூபித்துவிட்டால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை உடனே ராஜினாமா செய்துவிடுகிறேன். நிரூபிக்கவில்லையென்றால் நீங்கள் ஊரைவிட்டே ஓடத் தயாரா?” என்று ஆவேசமாகப் பேசினார் மு.க. ஸ்டாலின்.
 

click me!