அடிச்சு தூக்கும் காங்கிரஸ்.. அதள பாதாளத்தில் பிஜேபி!! கை நழுவும் மாநிலங்கள்

By karthikeyan VFirst Published Dec 11, 2018, 10:06 AM IST
Highlights

பாஜக ஆட்சியில் இருந்த ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. அந்த இரண்டு மாநிலங்களிலும் பாஜக கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் இழுபறி நீடிக்கிறது. 
 

பாஜக ஆட்சியில் இருந்த ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்திலும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் இழுபறி நீடிக்கிறது. 

அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு அண்மையில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் மக்களவை தேர்தலுக்கு முன் நடப்பதால் மிகுந்த முக்கியத்துவம் பெறுவதோடு, அதற்கான முன்னோட்டமாகவும் பார்க்கப்படுகிறது. 

கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கோவா, குஜராத் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களை பாஜக கைப்பற்றியது. அந்த தேர்தல்களில் எல்லாம் காங்கிரஸ் கடுமையான பின்னடைவை சந்தித்தது. 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளுமே ஆட்சியில் இருந்தன. 

இந்நிலையில், கடும் பின்னடைவை சந்தித்திருந்த காங்கிரஸுக்கு இந்த தேர்தல் மிக முக்கியமானது. இரு கட்சிகளுமே தங்களின் பலத்தை நிரூபிக்கும் முனைப்பில் தேர்தலை எதிர்கொண்டன. 

இந்நிலையில், 5 மாநில வாக்கு எண்ணிக்கை காலை தொடங்கி நடந்துவருகின்றன. இதில் பாஜக ஆட்சியில் இருந்த இரண்டு மாநிலங்களில் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. 199 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் 100 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. ஆளும் பாஜக வெறும் 69 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. மற்ற கட்சிகள் 22 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. 

அதேபோல பாஜக ஆட்சியில் இருந்த சத்தீஸ்கரிலும் பின்னடைவை சந்தித்துள்ளது. 90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கரில் காங்கிரஸ் 58 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் நிலையில், பாஜக வெறும் 26 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. 

பாஜக ஆட்சியில் இருந்த மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 தொகுதிகள். இதில் பாஜக மற்றும் காங்கிரஸுக்கு இடையே கடும் இழுபறி நீடிக்கிறது. காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. 10 மணி நிலவரப்படி காங்கிரஸ் 111 தொகுதிகளிலும் பாஜக 108 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. போட்டி கடுமையாக உள்ளதால் முடிவு யாருக்கு வேண்டுமானாலும் சாதகமாக அமையலாம். 

ஆனால் பாஜக ஆட்சியில் இருந்த ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் அக்கட்சி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. 
 

click me!