காங்கிரஸ் ஒரு செல்லாக்காசு.. போட்டுத்தாக்கிய அகிலேஷ்.. பாஜகவை விட்டுவிட்டு காங்கிரஸை கும்மும் எதிர்க்கட்சிகள்!

By Asianet TamilFirst Published Dec 4, 2021, 9:41 PM IST
Highlights

கடந்த மாதம் பீகாரில், காங்கிரஸ் கட்சியால் ஒரு பிரயோஜனமும் தங்களுக்கு இல்லை என்று சீண்டினார் லாலு பிரசாத் யாதவ். தற்போது மம்தா பானர்ஜியைத் தொடர்ந்து அகிலேஷ் யாதவும் காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்துள்ளார். பாஜகவை விட்டுவிட்டு எதிர்க்கட்சிகள் இன்னொரு தேசிய எதிர்க்கட்சியான காங்கிரஸை விமர்சிக்கத் தொடங்கியிருக்கின்றன.

மேற்குவங்காள முதல்வர் உருவாக்கும் மாற்று அரசியல் முன்னணியில் சேரத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் கட்சியை சரமாரியாக விமர்சித்துள்ளார். 

2024-ஆம் ஆண்டில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் முனைப்புக் காட்டி வருகின்றன. இதற்காக காங்கிரஸ் தலைமையில் அணி அமைக்கும் முயற்சியை மம்தா பானர்ஜி, சரத் பவார் போன்ற தலைவர்கள் முயற்சித்தனர். ஆனால், காங்கிரஸ் தரப்பில் அந்த முனைப்பு இல்லை என்று கருதிய மம்தா பானர்ஜி, தன்னுடைய தலைமையில் எதிர்க்கட்சி அடங்கிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். அதன் ஒரு பகுதியாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவை சந்திக்க மும்பை வந்தார் மம்தா பானர்ஜி. மும்பையில் பேட்டி அளிக்கும்போது, “ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ற ஒன்று இல்லை.” என்று காங்கிரஸ் கட்சியை சீண்டினார். இதனால் கடுப்பான காங்கிரஸ், பாஜகவுக்கு மம்தா பானர்ஜி உதவுவதாக விமர்சித்தது.

இந்நிலையில் மம்தா பானர்ஜிக்கு ஆதரவு தெரிவித்தும், காங்கிரஸை விமர்சித்தும் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் பேட்டி அளித்துள்ளார்.  ஜான்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “மம்தா பானர்ஜி தலைமையிலான மாற்று அரசியல் முன்னணியில் சேர சமாஜ்வாடி தயார்.  உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு சவால் விடுவதற்கான தளத்தை உருவாக்குவதில்  மம்தா பானர்ஜி மும்முரமாக உள்ளார். மேற்குவங்காள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை மம்தா பானர்ஜி வீழ்த்தினார். அதேபோல மம்தா பானர்ஜியால் உத்தரப்பிரதேசத்திலும் பாஜக ஆளும் கட்சி ஆட்சியில் இருந்து வெளியேற்றப்படும். மம்தா பானர்ஜியை நான் வரவேற்கிறேன். 

மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் பாஜகவை வீழ்த்திய விதம் அபரிமிதமானது. அதேபோன்று உத்தரபிரதேச மக்களும் பாஜகவை வீழ்த்துவார்கள். காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு இல்லை. உத்தரப் பிரதேச மக்கள் காங்கிரஸை ஒரு போதும் அங்கீகரிக்க மாட்டார்கள். வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு ஒரு இடம்கூட கிடைக்காது. பூஜ்ஜியம்தான் கிடைக்கும்” என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்தார். கடந்த மாதம் பீகாரில், காங்கிரஸ் கட்சியால் ஒரு பிரயோஜனமும் தங்களுக்கு இல்லை என்று சீண்டினார் லாலு பிரசாத் யாதவ். தற்போது மம்தா பானர்ஜியைத் தொடர்ந்து அகிலேஷ் யாதவும் காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்துள்ளார். பாஜகவை விட்டுவிட்டு எதிர்க்கட்சிகள் இன்னொரு தேசிய எதிர்க்கட்சியான காங்கிரஸை விமர்சிக்கத் தொடங்கியிருக்கின்றன.

click me!