
குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு இன்றும் இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு வரும் 14ம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை வரும் 18-ம் தேதி நடைபெறுகிறது.
குஜராத்தில் வெற்றி பெற்று தங்கள் வலிமையை நிரூபிக்க பாஜகவும் பாஜகவின் கோட்டையாக திகழும் குஜராத்தில் காலூன்ற காங்கிரஸும் கடுமையாக போராடி வருகின்றன. பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் குஜராத் என்பதால், இந்த தேர்தல் அவர்களின் கௌரவ பிரச்னையாகும். எனவே மீண்டும் குஜராத்தில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என பாஜக போராடி வருகிறது.
முதற்கட்ட தேர்தலில் இன்று நண்பகல் வரை 30% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ப்ளூடூத் வழியாக இணைக்கப்பட்டிருப்பதாகவும், இதனை படம்பிடித்து ஆதாரமாக வைத்திருப்பதாகவும் போர்பந்தர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அர்ஜூன் மோத்வாடியா பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல், பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் தனது டுவிட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு தொடர்பாக எனக்கு வலுவான சந்தேகம் உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான நம்பகத்தன்மை எனக்கு கேள்வி உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான எனது சந்தேகத்திற்கு தேர்தல் ஆணையம் உரிய பதில் அளிக்கும் என நம்புவதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லாவும் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆனால், காங்கிரஸ் கட்சியின் இந்த குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. புகார் தெரிவிக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தேர்தல் அதிகாரிகள் சென்று ஆய்வு செய்ததாகவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ‘எகோ’ என்ற பெயரிலான கருவி பொருத்தப்பட்டு இருக்கும். இதை தவறுதலாக ப்ளூடூத்துடன் இணைக்கப்பட்டிருப்பதாக மோத்வாடியா கூறுவதாகவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.