பேக் டூ பெங்களூரு….. நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்ட காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள்….

First Published May 18, 2018, 10:34 PM IST
Highlights
congress and jsd mla back to bangalore


பாஜகவின் குதிரைப் பேரத்திலிருந்து தப்பிக்க நேற்று ஹைதராபாத் சென்றிருந்த காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் நாளை நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பபில் பங்கேற்பதற்காக இன்று மீண்டும் பெங்களூரு புறப்பட்டனர்.

அண்மையில் நடைபெற்ற கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக 104 இடங்களை பெற்று முதலிடத்தில் உள்ளது. காங்கிரஸ் 78 இடங்களிலும், மஜத 37 இடங்களையும் பிடித்தது.

ஆட்சி அமைக்க 113  எம்எல்ஏக்கள் தேவைப்படும் நிலையில், திடீரென மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமியை முதலமைச்சராக்க  ஒப்புக்கொண்ட காங்கிரஸ் மஜத கட்சியுடன் கூட்டணி அமைத்தது. தொடர்ந்து ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க குமாரசாமி உரிமை கோரினார்.

ஆனால் தனிப்பெரும் கட்சியாக உள்ள பாஜகவுக்கு ஆட்சி அமைக்க அனுமதி அளித்த கவர்னர் வஜுபாய் வாலா, பெரும்பான்மையை நிருபிக்க 15 நாட்கள் அவகாசமும் அளித்தார். இதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், எடியூரப்பா முதலமைச்சராக பதவி ஏற்க தடைவிதிக்க மறுத்தது.

இதையடுத்து எடியூரப்பா நேற்று முதலமைச்சராக  பதவி ஏற்றுக் கொண்டார். ஆனால் பாஜகவினர்  குதிரைப் பேரத்தில் ஈடுபடுவார்கள் என்பதால் தங்கள் எம்எல்ஏக்களை பாதுகாக்க, அவர்களை நேற்று ஹைதராபாத் அழைத்துச் சென்றனர்.

இந்த வழக்கை இன்று மீண்டும் விசாரித்த உச்சநீதிமன்றம் , நாளை மாலை 4 மணிக்கு  எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்  என உத்தரவிட்டது.

இதையடுத்து நேற்று ஹைதராபாத் சென்ற காங்கிரஸ் மற்றும்  மஜக எம்எல்ஏக்கள்,  நாளை நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க  இன்று மீண்டும் பெங்களூரு புறப்பட்டனர்.

இந்த எம்எல்ஏக்கள் யாரும் அணி தாவி விடக்கூடாது  என்பதில் குமாரசாமி தரப்பு மிக  கவனமாக உள்ளது.நாளை மாலை 4 மணிக்கு இந்த எம்எல்ஏக்கள்தான் எடியூரப்பாவின் தலைவிதியை நிர்ணயம் செய்ய உள்ளனர்.  

click me!