
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்தே காங்கிரஸ் எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டுவருவதால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அண்மையில் நடந்து முடிந்த குஜராத், இமாச்சல பிரதேசம் சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி ஆட்சியமைக்க உள்ளது. குஜராத் தேர்தல் பிரசாரத்தின் போது, பாகிஸ்தான் உயரதிகாரிகளை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி ஆகியோர் சந்தித்து பேசியதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
பிரதமர் மோடியின் குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக எதிர்த்தனர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இந்த விவகாரத்தை கிளப்புவது என காங்கிரஸ் கட்சியினர் அப்போதே முடிவெடுத்துவிட்டனர்.
கடந்த 15ம் தேதி குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த தொடர் தொடங்கியதிலிருந்து, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து அவதூறாக பேசியதற்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவைகளில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் நடவடிக்கைகளும் முற்றிலும் முடங்கியுள்ளன.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து பிரதமர் மோடி அவதூறாக பேசியது குறித்து விவாதிக்க அரசியல் சாசன பிரிவு 267-ன் கீழ் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும் என மாநிலங்களவையில் காங்கிரஸ் நோட்டீஸ் அளித்துள்ளது.
காங்கிரஸுக்கு போட்டியாக பாஜகவும் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் அளித்துள்ளது. பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர்கள் அவதூறாக பேசியது குறித்து விவாதிப்பதற்காக அரசியல் சாசன பிரிவு 267-ன் கீழ் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும் என பாஜக நோட்டீஸ் அளித்துள்ளது.