
காங்கிரஸ்தான் ஜனநாயக படுகொலை செய்துள்ளது என்றும், சித்தராமையா ஆட்சி வேண்டாம் என்ற கர்நாடக மக்களுக்கு பினாமி ஆட்சியா? பாவம் கர்நாடக மக்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
கர்நாடகாவில் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை எந்த கட்சிக்கும் இல்லாத சூழலில், தனிப்பெரும் கட்சியாக பாஜக இருந்ததால், ஆளுநர் வாஜூபாய் வாலா, எடியூரப்பாவிற்கு முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் வழங்கியிருந்தார். ஜனநாயக படுகொலையை பாஜக நிகழ்த்தியதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. காங்கிரஸும் மஜத-வும் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை பெற்றிருந்தும் குமாரசாமியை ஆளுநர் அழைக்கவில்லை.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ்-மஜத சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 24 மணி நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டதால், நேற்று மாலை 3.30 மணிக்கு கர்நாடக சட்டசபை கூடியது. ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என தெரிந்ததால், நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலேயே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா.
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னரே, எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் குமாரசாமி, காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். இந்த நிலையில், இது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌநதரராஜன், காங்கிரஸ்தான் ஜனநாயகத்தைப் படுகொலை செய்துள்ளது. 116 இடங்களில் டெபாசிட் இழந்த கட்சியின் குமாரசாமியை காங்கிரசின் சுயநலத்திற்காக முதலமைச்சராக்கியது என்று குற்றம் சாட்டினார்.
கர்நாடக மக்களால் நிராகரிக்கப்பட்ட காங்கிரஸின் 16 அமைச்சர்கள் தோல்வி. சித்தராமையா ஆட்சி வேண்டாமென்ற மக்களுக்குப் பினாமி ஆட்சி. பாவம் கர்நாடக மக்கள் எனத் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.