
சென்னையில் உள்ள ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் டிச.21ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிட பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தனர்.
அதிமுக., சார்பில் ஏற்கெனவே போட்டியிட்ட மதுசூதனன் போட்டியிடுகிறார். திமுக., சார்பில் மருது கணேஷ் போட்டியிடுகிறார். இருவரும் தங்கள் வேட்புமனுக்களை நேற்று தாக்கல் செய்திருந்தனர்.
ஆனால், தனித்துப் போட்டியிடும் டிடிவி தினகரன், நேற்று தனது ஆதரவாளர்கள் புடை சூழச் சென்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். விதிகளை மீறி அவர் பலருடன் சென்று தாக்கல் செய்ததை அப்போதே சுட்டிக் காட்டி கண்டித்தார் அமைச்சர் ஜெயக்குமார்.
ஜெயலலிதா காலமான பின்னர். அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஆர்.கே.நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப் பட்டு, அதற்கு இடைத்தேர்தலும் அப்போது அறிவிக்கப் பட்டது. அந்த நிலையில், ஓபிஎஸ் அணி தனியாகப் பிரிந்து சென்றதால், மதுசூதனன் அந்த அணியின் சார்பில்போட்டியிட்டார். ஆனால், அப்போது தினகரன் கைப்பிடியில் மாநில அரசு இருந்தது. அதனால் நோக்கம் போல், வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்தார்கள். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெயர் கூட அவ்வாறு பணம் கொடுக்கும் கமிட்டியின் பட்டியலில் இடம்பெற்றிருந்தது, ஒரு வருமான வரி சோதனையின் போது கண்டெடுக்கப் பட்டது.
அந்த அளவுக்கு மிகவும் இயல்பாக சர்வ சாதாரணமாக பல முறைகேடுகளை ஆளும்கட்சி என்ற கோதாவில் செய்து கொண்டிருந்தார் தினகரன். ஆனால், இப்போது நிலைமை தலைகீழ். அவருக்கு ஆளும் அரசின் ஆதரவு இல்லை. தனித்துப் போட்டியிடுகிறார்.
இருப்பினும், தன் செல்வாக்கை கட்சியில் காட்ட நினைத்த தினகரன், ஆர்.கே.நகரில் போட்டியிட மனுத்தாக்கல் செய்த அன்றே, கூட்டத்தை சேர்த்துவிட்டார்.
இதை அடுத்து, சென்னை ஆர்கே. நகர் தேர்தலில் போட்டியிட தினகரன் மனுதாக்கல் செய்த போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக வெற்றிவேல் உள்ளிட்ட 20 பேர் மீது தண்டையார் பேட்டை காவல் நிலையத்தில் தேர்தல் கண்காணிப்பாளர் புகார் அளித்தார். இதன் பேரில் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இடைத்தேர்தலில் தன் பலத்தைக் காட்ட வேண்டும் என்று முனைப்பாகக் களம் இறங்கியிருக்கும் தினகரனுக்கு, பிள்ளையார் சுழியே வழக்குடன்தான் துவங்கியுள்ளது.