அரசை குறைகூறிய கம்யூனிஸ்ட் M.P. , கையெடுத்து கும்பிட்டு நெகிழ்ச்சி..!! அம்மாவுக்கும், தங்கைக்கும் கொரோனா.

By Ezhilarasan BabuFirst Published Jul 16, 2020, 5:55 PM IST
Highlights

மிக நல்ல சிகிச்சை அளித்து இருவரையும் குணப்படுத்தியதற்காக மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள் அனைவருக்கும் கைகுவித்து நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
 

தனது தாயையையும், தன் சகோதரியையும் கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்றி மதுரை தோப்பூர் அரசு நெஞ்சகநோய் மருத்துவமனைக்கும் அதன் மருத்துவர்களுக்கும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் நெகிழ்ச்சியுடன் நன்றி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

என் தாய் நல்லம்மாள், தங்கை லட்சுமி ஆகிய இருவருக்கும் கடந்த வாரம் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. எனது தாய்க்கு வயது 67. நாள்பட்ட சர்க்கரை நோயாளி.  இரத்த அழுத்தமும் உண்டு. எளிதில் பாதிப்பிற்குள்ளாக வாய்ப்புள்ளவர் (Vulnerable Group).தங்கைக்கு வயது 47. அவரும் சர்க்கரை நோயாளிதான். குடும்பமே சற்று ஆடிப்போனது என்றுதான் சொல்ல வேண்டும். சிகிச்சைக்கான நடவடிக்கைகளை யோசித்த போதுதான் அத்தனை பிரச்சனைகளும் முன்னால் வந்து நின்றன. 

காய்ச்சல், சளி, உடல்வலி போன்ற அறிகுறிகள் எவையுமில்லை. எனவே வீட்டில் தனிமைப்படுத்தி வைக்கலாமா என்று யோசித்தால் அம்மாவின் வயதும் நாள்பட்ட நோய்தாக்கங்கொண்டவராகவும் இருப்பதால் அது சரியான முடிவன்று என்று கைவிட்டோம்.அப்பொழுதுதான் தோப்பூரில் இருக்கும் அரசு நெஞ்சகநோய் மருத்துவமனையின் பொறுப்பாளர் மருத்துவர் காந்திமதிநாதனும் மருத்துவர் இளம்பரிதியும் நம்பிக்கை மிகுந்த வார்த்தைகளை வெளிப்படுத்தினர். எனவே என் தாய், என் தங்கை இருவரையும் தோப்பூர் அரசு நெஞ்சகநோய் மருத்துவமனையில் சேர்த்தோம். ஒன்பது நாள்கள் அளிக்கப்பட்ட சிறப்பான சிகிச்சையின் பலனாக இன்று இருவரும் முழுநலம் பெற்று மருத்துவமனையிலிருந்து வீடுதிரும்பியுள்ளனர். மிக நல்ல சிகிச்சை அளித்து இருவரையும் குணப்படுத்தியதற்காக மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள் அனைவருக்கும் கைகுவித்து நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கொரோனோ தொற்று ஏற்பட்டு அரசு மருத்துவமனைக்கு வரும் ஒவ்வொரு நோயாளிக்கும் இதுபோன்ற நல்லதொரு சிகிச்சை வழங்கப்பட வேண்டும். அதற்கான சூழலை முழுமையாக உருவாக்கவே பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம். பொதுவாக தொற்றாநோய்களைவிட, தொற்றுநோய்களைக் கையாள்வதில் தனியார் மருத்துவர்களைவிட அரசு மருத்துவர்கள் திறனும் அனுபவமும் அதிகம் பெற்றவர்கள். எனவே கொரோனோ போன்ற தொற்றுநோய்களுக்கு எதிரான போரில் அரசு மருத்துவமனை மிகச்சிறப்பான பங்களிப்பினைச் செய்யமுடியும். நிர்வாகமும் அரசின் கொள்கைசார்ந்த முடிவுகளும்தான் நாம் இன்று சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்குக் காரணம். அப்பிரச்னைகளை எதிர்கொள்ள அரசியல் வழியிலான அழுத்தங்களைத் தொடர்ந்து உருவாக்குவோம். அதே நேரம் பல்வேறு வகையான போதாமைகளுக்கு நடுவிலும் மிகச்சிறப்பாக பங்காற்றிக்கொண்டிருக்கும் மருத்துவத்துறை சார்ந்த அனைத்துப் பணியாளர்களுக்கும் பாராட்டுகளையும் நன்றியறிதலையும் உருவாக்குவோம். என அதில் கூறப்பட்டுள்ளது. 

 

click me!