தமிழ்நாட்டிற்கு தனிக்கொடி...? முதல்வர் முடிவெடுக்க இருப்பதாக அமைச்சர் தகவல்..!

By Manikandan S R SFirst Published Nov 3, 2019, 11:21 AM IST
Highlights

தமிழ்நாட்டிற்கு தனிக்கொடி அமைப்பது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 

ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் இருந்து கர்நாடகா, கேரளா, ஆகிய மாநிலங்கள் மொழிவாரி அடிப்படையில் 1956 ம் ஆண்டு நவம்பர் 1 ம் தேதி பிரிக்கப்பட்டன. அந்த நாளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் அந்தந்த மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதே போன்று தமிழ்நாட்டிலும் கொண்டாடப்பட வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாக தமிழ் உணர்வாளர்களால் அரசிடம் வைக்கப்பட்டிருந்தது.

இதை ஏற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நவம்பர் 1 ம் தேதி தமிழ்நாடு நாளாக கடைபிடிக்கபடும் என்றும் உத்தரவிட்டார். அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை தமிழ்நாடு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கவியரங்கம், கருத்தரங்கம், இளையோர் அரங்கம், கலைநிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற்றது. பள்ளி,கல்லூரிகளிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில் தமிழ்நாட்டிற்கு தனிக்கொடி உருவாக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் வலுப்பற்று வருகின்றன. இதுகுறித்து முதல்வர் முடிவெடுக்க இருப்பதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்ற "சாலையில் ஒரு சாகசப்பயணம் " என்ற நூலின் அறிமுக விழாவில் அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டிற்கு தனிக்கொடி உருவாக்க வேண்டும் என்ற பல்வேறு தரப்பினரின் கோரிக்கை, முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும், முதல்வர் ஏற்றுக்கொண்டால், விரைவில் தனிக்கொடி உருவாக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கை இன்னும் இரண்டு வாரங்களில் வெளியிடப்பட இருப்பதாக கூறினார். ஏற்கனவே கர்நாடகா தங்கள் மாநிலத்திற்கென்று தனிக்கொடி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

click me!