CM Stalin: வடகிழக்கு பருவமழை வெள்ளப்பாதிப்பு.. உடனடியாக 6,230 கோடி ரூபாய் நிதி தேவை.. மு.க.ஸ்டாலின் கடிதம்..

Published : Dec 29, 2021, 02:51 PM IST
CM Stalin: வடகிழக்கு பருவமழை வெள்ளப்பாதிப்பு.. உடனடியாக 6,230 கோடி ரூபாய் நிதி தேவை.. மு.க.ஸ்டாலின் கடிதம்..

சுருக்கம்

வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை சீர்செய்ய ரூ. 6,230 கோடி நிதியை உடனே ஒதுக்கீடு செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.

கடந்த நவம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.  எனவே வெள்ளப்பாதிப்புகளை முழுமையாக ஆய்வு செய்து நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடந்த மாதம் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இதனை தொடர்ந்து கடந்த மாதம் 21ஆம் தேதி மத்திய குழு வெள்ளப்பாதிப்பு குறித்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டது.

இந்நிலையில் பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீளவும், சேதமடைந்த உள்கட்டமைப்புகளை நிரந்தமாக சரிசெய்யவும் விரைவில் நிதி வழங்கிடக்கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம் எழுதியிருக்கிறார். மேலும் கொரோனா பெருந்தொற்றால் மாநில அரசின் நிதி நிலைமை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.அந்த கடிதத்தில் முதல் கட்டமாக தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காக, 1510.83 கோடி ரூபாயும், சாலைகள், பாலங்கள் மற்றும் பொது கட்டடங்களை நிரந்தரமாக சரிசெய்ய 4719.62 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கக்கோரி கேட்டுள்ளார். மேலும் கடந்த நவம்பர் மாதத்தில் 16 மற்றும் 25ஆம் தேதிகளன்றும், டிசம்பர் மாதம் 15ஆம் தேதியன்றும் வடகிழக்கு பரும மழையினால் ஏற்பட்ட சேத விவரங்கள் அடங்கிய விரிவான அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக வடகிழக்கு பருவமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள் என பெரும்பாலான மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகளில் நீர் புகுந்தது. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கி சேதமாகின. மேலும் பல்வேறு இடங்களில் கொட்டி தீர்த்த மழையால் முக்கிய சாலைகள், பாலங்கள் சேதமடைந்தன. இதனால் வெள்ள பாதிப்பு நிவாரணமாக தமிழகத்திற்கு முதற்கட்டமாக ரூ.550 கோடியும், முழுமையான நிவாரணமாக ரூ.2,079 கோடியும் வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிடம் கேட்டிருந்தார்.

மேலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தொலைபேசியில் பேசி வெள்ள நிலைமை பற்றி கேட்டறிந்தார். அதன்படி, தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய, மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை அமைத்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.இதன்படி கடந்த மாதம் 21 ஆம் தேதி தமிழகம் வந்த மத்தியகுழு, இரண்டு குழுக்களாக பிரிந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளப்பாதிப்பு குறித்து ஆய்வு செய்தனர். பின்னர், சேத விவரங்கள் குறித்த அறிக்கை தயார் செய்து, 24 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் உடன் ஆலோசனை மேற்கொண்டனர். 

சமீபத்தில் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தில் மழை வெள்ளத்தால் இந்த முறை ஏற்பட்ட பாதிப்புகள், அடுத்த முறை நடக்காமல் இருப்பதற்கான திட்ட அறிக்கைகளை விரைவாக தரவேண்டும் என்று சென்னை வெள்ளப்பெருக்கை தணித்தல் மற்றும் நிர்வகித்தல் குழுவினருக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார். மேலும் சென்னையில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு மாதிரியான திட்டமிடுதல் தேவைப்படுகிறது எனவும் பகுதி வாரியாக, குறிப்பான ஆலோசனைகள், திட்டமிடுதல்கள் தேவை என்றார். சீக்கிரமாக அறிக்கை கொடுத்தால், விரைவாக திட்டங்களை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கடந்த முறை ஏற்பட்ட பாதிப்புகளை, அடுத்தமுறை நடக்காமல் தமிழக அரசுதடுத்து விட்டது என்ற பெயரை நாம் எடுத்தாக வேண்டும் என்று குறிப்பிட்டார். எனவே, திட்ட அறிக்கையை விரைவாக துல்லியமாக, நடைமுறை சாத்தியம் உள்ள திட்டமாக அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். 

இந்நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை சீர்செய்ய ரூ. 6,230 கோடி நிதியை உடனே ஒதுக்கீடு செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

100 நாள் வேலையில் முதலில் காந்தி பெயரையே வைக்கவில்லை.. தனி உலகில் வாழும் ஸ்டாலின்.. அண்ணாமலை அட்டாக்!
இஸ்லாமிய நாடுகளில் மோடி, யூத நாடுகளில் ஜெய்சங்கர்..! உலக அளவில் இந்தியாவின் ராஜதந்திர வியூகம்..!