MNM: ரூ.1200 கோடி தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை நழுவ விடுகிறதா தமிழக அரசு? திமுகவை அலறவிடும் மநீம.!

By vinoth kumarFirst Published Dec 29, 2021, 2:39 PM IST
Highlights

திட்டப் பணிகளைச் செயல்படுத்த தேவையான நிலம் கிடைக்கவில்லை, குவாரிகள் மூடப்பட்டது, தமிழ்நாடு மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்திடமிருந்து அனுமதி கிடைக்காதது போன்ற பல காரணங்களால் பணிகளை ரத்து செய்து, ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது என்ற முடிவு மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும். 

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தமிழகத்தில் 4 நெடுஞ்சாலை பணிகளை கைவிட திட்டமிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது என மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர் தங்கவேலு தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- சென்னை – பெங்களூரு இடையேயான சாலை போக்குவரத்து மேம்பாட்டிற்காக புதிதாக விரைவுச் சாலை அமைக்கப்படும் என்று 2018-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூர் - சுங்கச்சாவடி முதல், வாலாஜாபேட்டை வரை உள்ள 'நான்கு' வழிப்பாதையை, 'ஆறு' வழிப்பாதையாக மாற்ற ரூ.1,188 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்திட்டத்துக்காக மொத்தம் 2,600 ஹெக்டேர் நிலம் தேவை எனவும், அதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 1,000 ஹெக்டேர் நிலம் தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாலை விரிவாக்கத் திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் பல்வேறு சிக்கல்கள் நீடித்து வருகிறது. இதன் காரணமாக பணிகள் தாமதமாகின்றன.

மேலும், ஆக்கிரமிப்புகள் அகற்றம், நிலம் கையகப்படுத்தும் பணிகள் ஆகியவை திட்டமிட்ட காலத்திற்குள் நடைபெறாததால் பணிகளை முடிப்பதற்கு தடையாக இருப்பதாக கருதி இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தமிழகத்தில் 4 நெடுஞ்சாலை பணிகளை கைவிட திட்டமிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாடு-கேரள எல்லையில் இருந்து கன்னியாகுமரி வரையிலான 2, நான்கு வழிப்பாதைத் திட்டங்களும், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து வாலாஜா பேட்டை வரையிலான 2, ஆறு வழிப்பாதைத் திட்டங்களும் முடங்கிக் கிடப்பதற்கு மாநில அரசின் ஒத்துழைப்பின்மையும் காரணமாகச் சொல்லப்படுகிறது.

திட்டப் பணிகளைச் செயல்படுத்த தேவையான நிலம் கிடைக்கவில்லை, குவாரிகள் மூடப்பட்டது, தமிழ்நாடு மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்திடமிருந்து அனுமதி கிடைக்காதது போன்ற பல காரணங்களால் பணிகளை ரத்து செய்து, ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது என்ற முடிவு மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும். இதில் ஒருசில திட்டங்கள் 2016-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. இருப்பினும் இதுவரை நிலம், மண் மற்றும் பிற அனுமதிகள் ஏதும் முறையாக கிடைக்கவில்லை என நெடுஞ்சாலை ஆணையம் தெரிவிக்கிறது.

இப்பிரச்சினை குறித்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தலைமையில் 25 மாவட்ட ஆட்சியர்களுடன் ஜூலை மாதம் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால் நெடுஞ்சாலை பணிகளுக்கான சிக்கல்களுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இது தொடர்பாக தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி முடிவை எடுப்பதே முறையானது. தமிழ்நாடு அரசு மாநிலத்தின் வளர்ச்சியை முதன்மையான நோக்கமாக கொண்டு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு நல்கி சாலை விரிவாக்கத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர் தங்கவேலு தெரிவித்துள்ளார்.

click me!